உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அச்சன்கோயில் ஆபரணப்பெட்டிக்கு தென்காசியில் பக்தர்கள் வரவேற்பு

அச்சன்கோயில் ஆபரணப்பெட்டிக்கு தென்காசியில் பக்தர்கள் வரவேற்பு

திருநெல்வேலி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் முன்பாக அச்சன்கோவில் ஐயப்பன் திருஆபரணப் பெட்டிக்கு பக்தர்கள் வரவேற்பளித்தனர். சபரிமலை ஐயப்பன், கேரள மாநிலம் அச்சன் கோயிலில் அரசராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அச்சன்கோவில் உற்சவ விழா இன்று (16 ம்தேதி) காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.டிச. 24ம் தேதி தேரோட்டமும், 25ல் ஆராட்டு விழாவும், 26ல் உற்சவ விழா நிறைவடைகிறது. விழா நாட்களில் தினமும் பகலில் அன்னதானம், இரவில் சிறப்பு வழிபாடுகள், கருப்பன்துள்ளல் நடக்கிறது. விழாவின்போது ஐயப்பன் மற்றும் கருப்பன் சுவாமிகளுக்கு திரு ஆபரணங்கள் அணிவிக்கப்படும். இதற்கான ஆபரணங்கள் அடங்கிய பெட்டி கேரள மாநிலம், புனலுார் அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதனை போலீஸ் பாதுகாப்புடன் அச்சன்கோவிலுக்கு கொண்டு சென்றனர். புனலுார், அச்சன்கோயில் ஆகியன கேரள மாநிலத்தின் வனப்பகுதிகளில் அமைந்திருப்பதால், பாதுகாப்பு கருதி நெல்லை மாவட்ட எல்லை வழியாக கொண்டு சென்றனர். தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் முன்பாக வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ஆபரணப்பெட்டிக்கு பக்தர்கள் வரவேற்பளித்தனர். ஆபரணப் பெட்டியில் ஐயப்பனின் தலை, முகம், மார்பு,கைகள், கால்கள், கவசம், வாள் உள்ளிட்ட ஆபரணங்கள் உள்ளன. போலீஸ் பாதுகாப்புடன் ஆபரணப்பெட்டி கொண்டு செல்லப்பட்டது. தேவசம்போர்டு உதவி ஆணையர் சுதீஷ், அச்சன்கோயில் கமிட்டி தலைவர் சத்தியசீலன் உடன் வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !