கிறிஸ்துமஸ் சிந்தனை - 2: ஏழைகளும் சிரிக்கட்டும்
நமது நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவைச் சரிக்கட்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என அரசு அறிவித்தது. புதிய நோட்டுகளை வெளியிட்டது. எனவே பணக்காரர்களாக இருந்த பலர், தங்களிடம் இருந்த பணத்துக்கு கணக்கு காட்ட இயலாமல் ஒரே நாளில் ஏழைகளாகி விட்டனர். பழைய நோட்டுகள் எல்லாம் கிழிக்கப்பட்டு தெருவில் வீசப்பட்டன. பாருங்கள்... நேற்று வரை பணக்காரனாக இருந்தவன், இன்று தெருவில் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்து விடுகிறான். மனித வாழ்க்கையே இப்படித்தான். ஒருநாள் இருப்பது போல மறுநாள் இருக்காது. இதைத்தான் இயேசு கிறிஸ்து, “பூமியிலே உங்களுக்கு பொக்கிஷங்களை சேர்த்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும். இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்கு பொக்கிஷங்களை சேர்த்து வையுங்கள். அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை. அங்கே திருடர் கன்னமிட்டு திருடுவதும் இல்லை,” என்கிறார். கிறிஸ்துமஸ் காலத்தில் நம் வீட்டில் மட்டும் ஆடம்பரமான உணவு. உடை, குடில், மரம் என ஏற்பாடுகளைச் செய்தால் போதாது. இருப்பதைப் பகிர்ந்து வாழும் மனப்பக்குவத்துடன், கிறிஸ்துமசைக் கொண்டாட முடியாத ஏழைகளுக்கும் உதவ வேண்டும். அவர்கள் சிரிப்பதைப் பார்த்து சந்தோஷப்பட வேண்டும்.