உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலை அகற்றாமல் மாற்றுவழியில் நான்கு வழிச்சாலை: பக்தர்கள் மகிழ்ச்சி

கோயிலை அகற்றாமல் மாற்றுவழியில் நான்கு வழிச்சாலை: பக்தர்கள் மகிழ்ச்சி

மானாமதுரை : மானாமதுரையில் கோயிலை இடிக்காமல் மாற்றுவழியில் நான்குவழிச்சாலை அமைப்பதால், அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து பக்தர்கள் பூஜை நடத்தினர். மதுரை, பரமக்குடி இடையே நான்குவழிச் சாலை, பரமக்குடி, ராமநாதபுரம் இடையே இருவழிச்சாலை அமைக்கும் பணி 934 கோடி ரூபாயில் நடக்கிறது. இதற்காக மானாமதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள தல்லாகுளம் முனீஸ்வரர் ஆலயத்தை அகற்றும் நிலை ஏற்பட்டது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவில் மண்டபடி நடக்கும். இதனால் கோயிலை அகற்றாமல் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமென, பக்தர்கள் மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கோயில் இடிபடாத படி ரோடு அமைக்க திட்டமிட்டு நேற்று பணி துவங்கியது. இதற்கு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பக்தர்கள் சிறப்பு பூஜை நடத்தி அன்னதானம் வழங்கினர். நான்கு வழிச்சாலை திட்ட இயக்குனர் முத்து உடையார், தாசில்தார் சிவகுமாரி பங்கேற்றனர்.

தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பக்தர்கள் கோரிக்கையை ஏற்று முனீஸ்வரர் கோயிலை அகற்றாமல் ரோடு அமைக்கப்படுகிறது. இதற்காக பைபாஸ் ரோடு பாலம் சிறிதுதுாரம் நீட்டிக்கப்படுகிறது. மேலும் கோயிலின் இருபுறமும் உயரமாக பாலம் அமைக்கப்படும். பக்தர்கள் வசதிக்காக பாலத்தின் மையப்பகுதியில் இருந்து கீழே கோயிலுக்கு செல்லும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்படும். இந்த இடம் பார்ப்பதற்கு சுற்றுலா பகுதி போல் காட்சிதரும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !