உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் மண்டலபூஜைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

சபரிமலையில் மண்டலபூஜைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

சபரிமலை: சபரிமலையில் மண்டலபூஜை டிச., 26ல் நடைபெற உள்ள நிலையில், ஏற்பாடுகள் நடைபெறுகிறது. சன்னிதானத்தில் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றனர். மண்டல பூஜைக்காக ஆரன்முளாவிலிருந்து டிச., 22-ம் தேதி தங்கஅங்கி பவனி புறப்படுகிறது. மண்டலபூஜைக்கு வரும் பக்தர்களை ஒழுங்குபடுத்தி அனைத்து பக்தர்களுக்கும் தரிசனம் கிடைக்க செய்வதற்காக நான்காம் கட்ட போலீசார் நேற்று பொறுப்பேற்றனர்.ஒரு எஸ்.பி. ஒரு ஏ.எஸ்.பி., 19 டி.எஸ்.பி.க்கள், 36 இன்ஸ்பெக்டர்கள், 120 எஸ்.ஐ.க்கள், 1520 போலீசார் புதிதாக நேற்று பொறுப்பேற்றுள்ளனர். சபரிமலை சன்னிதானம் 19 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூட்டம் அதிகமாகும் போது அதை கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் அதிரடி படையினரும், தேசிய பேரிடர் தடுப்பு படையை சேர்ந்த போலீசாரும் தயார் நிலையில் உள்ளனர். இவர்களுடன் ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்த போலீசாரும் பணியில் உள்ளனர். கேரளாவின் உளவுத்துறை போலீசாரும் களமிறக்கப்பட்டுள்ளனர். எவ்வளவு கூட்டம் வந்தாலும் நிதானமாக அவர்களை கட்டுப்படுத்தி பக்தர்களுக்கு நல்ல தரிசனம் கிடைக்க செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதிதாக பொறுப்பேற்ற போலீசார் மத்தியில், டி.ஐ.ஜி. விஜயன் பேசியதாவது: சன்னிதானத்தில் கூட்டம் அதிகரித்தாலும், அனைத்து பக்தர்களுக்கும் தரிசனம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். சபரிமலையில் போலீசாரின் பணி மிக முக்கியமானது மட்டுமல்ல கவனத்துடன் செய்ய வேண்டிய பணியாகும். சாதாரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்னைகை கையாளுவது போல இங்கு பணி செய்ய முடியாது. கோயில் பாதுகாப்பு, பக்தர்களுக்கு எவ்வித பிரச்னையும் இல்லாமல் தரிசனம் இவற்றில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பம்பையில் எட்டு டி.எஸ்.பி, 20 இன்ஸ்பெக்டர்கள், 90 எஸ்.ஐ.,க்கள், 1050 போலீசார், 15 பெண் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். பம்பையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், மணல் பரப்பில் பக்தர்களை ஒழுங்கு படுத்தி அனுப்பவும் கூடுதல் போலீசார் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !