கோயில் அன்னதானம், பிரசாதம் தரம் ஆய்வு செய்ய அரசு உத்தரவு
திண்டுக்கல்: தமிழக கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம், பிரசாதங்களின் தரம் குறித்து உணவு பொருள் பாதுகாப்பு துறை ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் ஆண்டு முழுவதும் மதிய வேளையில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதே போல், திருவிழாக்கள் மற்றும் விஷேச நாட்களில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பில் குறிப்பிட்ட கட்டணத்தில் பிரசாதம் வழங்க பிரசாத ஸ்டால்களும் வைக்கப்பட்டுஉள்ளன.
தரம் ஆய்வு : தமிழக கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம், பிரசாதம் மற்றும் பிரசாத ஸ்டால்களில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்து அனுப்ப உணவுப்பொருள் பாதுகாப்பு துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் களம் இறங்கியுள்ளனர். அதில், பிரசாதங்கள், அன்னதானம் ஆகியவை சுத்தமாகவும், பாதுகாப்பான முறையிலும் தயாரிக்கப்படுகிறதா. தயார் செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள் தரமானதா. என ஆய்வு செய்வர். பக்தர்களிடமும் அன்னதானம், பிரசாதம் குறித்த கருத்து கேட்டு அறிக்கை தயார் செய்து அனுப்ப உள்ளனர். இதில் தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவற்றை தயாரிப்பது குறித்த வழிமுறைகள், செய்முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரி சாம் இளங்கோ கூறியதாவது:திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் ஆய்வு செய்ய இருக்கிறோம். ஆய்வில் குறை கண்டறிந்தால், விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆலோசனை வழங்கப்படும், என்றார்.