நவராத்திரி பவனி: விக்ரகங்களுக்கு தாலப்பொலியுடன் வரவேற்பு
தக்கலை : நவராத்திரி பவனிக்கு பத்மனாபபுரத்தில் தாலப்பொலியுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் நடந்த நவராத்திரி பூஜைக்கு கடந்த 24ம் தேதி பத்மனாபபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்ற குமரி மாவட்ட சுவாமி விக்ரகங்கள் நேற்று மாலை பத்மனாபபுரம் வந்தது. பத்மனாபபுரம் தேவாரகெட்டு சரஸ்வதி அம்மன், வேளிமலை முருகன், சுசீந்திரம் முன் உதித்த நங்கை சுவாமி விக்ரகங்களுக்கு சரஸ்வதி அம்மன் கோயில் கமிட்டி சார்பில் தாலப்பொலியுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பத்மனாபபுரம் கோட்டை முன்பு முத்துக்குடை அணிவகுப்புடன் தாலப்பொலி ஏந்தி, செண்டை மேளம் முழங்க மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. மணலி, சாரோடு, ரோகிணி நகர், இலுப்பக்கோணம், பத்மனாபபுரம் கோட்டைக்கு வெளியே உள்ள பொதுமக்கள் சார்பில் வழியெங்கிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பத்மனாபபுரம் வந்த சுவாமி விக்ரகங்களில் சரஸ்வதி அம்மன் கோயில் தெப்பகுளத்தில் ஆறாட்டிற்கு பின் வெள்ளை பட்டு உடுத்தி கோயில் கருவறையில் அமர்ந்தார். இதுபோல் வேளிமலை முருகன் குமாரகோவிலுக்கு பவனியாக எடுத்து செல்லப்பட்டது. முன் உதித்த நங்கை கல்குளம் நீலகண்ட சுவாமி கோயிலில் நேற்று இரவு தங்கி விட்டு இன்று அதிகாலை சுசீந்திரத்திற்கு பவனியாக எடுத்து செல்லப்பட்டது. வழி நெடுகே சுவாமி விக்ரகங்களுக்கு பக்தர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.