திருப்பதிக்கு பாதயாத்திரையா? : ஆதார் கட்டாயம்
திருப்பதி: திருமலைக்கு வரும் பாத யாத்திரை பக்தர்களுக்கு, ஆதார் அட்டையை, தேவஸ்தானம் கட்டாயமாக்கி உள்ளது.திருப்பதி, திருமலையில் தரிசன டிக்கெட் பெற, வாடகை அறை முன்பதிவு செய்ய, ஆதார் அட்டை, ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது, லட்டு டிக்கெட் முறைகேட்டை தடுக்க, பாதயாத்திரை பக்தர்களுக்கும், ஆதார் அட்டை கட்டாயமாக்கி, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு பாத யாத்திரை மார்க்கத்தில் வரும் பக்தர்கள், தரிசன டோக்கன்களை பெறும்போது, அவர்களின் பெருவிரல் ரேகை பதிவுடன், ஆதார் அட்டை எண்ணை பதிவு செய்யும் புதிய நடைமுறை, இன்று முதல் துவங்குகிறது.அதனால், பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், கட்டாயமாக, ஆதார் அட்டை அல்லது வேறு ஏதாவது ஒரு அடையாள அட்டை இருந்தால் மட்டுமே, தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.