சபரிமலை பெயர் மாற்றம்: ஊழியர்கள் எதிர்ப்பு
சபரிமலை: சபரிமலை கோவில் பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு, திருவிதாங்கூர் தேவசம் போர்டின், இடதுசாரி ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திருவிதாங்கூர் தேவ சம் ஊழியர்கள் கூட்டமைப்பு, நிர்வாகிகள், சபரிமலையில் நிருபர்களிடம் கூறியதாவது: சபரிமலை தர்ம சாஸ்தா கோவில் என்ற பெயர், ஒரு போர்டும் தீர்மானம் போட்டு வந்ததல்ல. 1811-ல், கேணல் மன்ட்ரோ என்ற திவான், திருவிதாங்கூர் அரசுக்காக, ஓர் அறிவிப்பை வெளியிட்டு, அரசுடைமை ஆக்கியது தான், சபரிமலை தர்ம சாஸ்தா கோவில். இதற்கான ஆதாரங்கள் உள்ளன. அந்த ஆவணங்களில், தர்ம சாஸ்தா கோவில் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. 1949-ல் தான் தேவசம் போர்டு உருவானது. அதன் பின், எத்தனையோ தேவசம்போர்டு வந்து சென்று விட்டது. ஆனால், எந்த போர்டும் செய்யாத ஒரு காரியத்தை, தற்போதைய போர்டு செய்துள்ளதை ஏற்க முடியாது. அதற்கான அதிகாரம் தேவசம் போர்டுக்கு கிடையாது. சபரிமலையில் மட்டும், ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி அரவணை பேக்கிங் டின்கள் வாங்கப்படுகிறது. வேறு தேவசம் கோவில்களிலும் இதுபோல வாங்கப்படுகிறது.எனவே, தேவசம் போர்டு ஒரு டின் பேக்டரி தொடங்க வேண்டும். இந்த கோரிக்கை, பல ஆண்டுகளாக வைத்தும், போர்டு இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை. டின் கான்ட்ராக்டர்களுடன் ஏற்படுத்தியுள்ள மறைமுக ஒப்பந்தம் தான், இதற்கு காரணமாக இருக்கும் என்று சங்கம் சந்தேகிக்கிறது. இதுபோல சபரிமலையில் கிடைக்கும், தேங்காயை அரைத்து, எண்ணெய் ஆக்கி விற்பனை செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
புதிய ஹெலிகாப்டர் தளம் : சபரிமலையில் புதிதாக ஹெலிகாப்டர் தளம் அமைப்பது தீவிர பரிசீலனையில் உள்ளது. இதற்காக, பாண்டித்தாவளத்தில் தேவசம்போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பிரதமராக இந்திரா இருந்த போது, அவர் சபரிமலை வர விரும்பினார். அப்போது, கேரள முதல்வராக இருந்த கருணாகரன் இதற்காக, சரங்குத்தியில் ஹெலிகாப்டர் தளம் உருவாக்கினார். பிரதமர் வருவதற்கான திட்டமும் தயாரானது. ஆனால், பக்தர்கள் மத்தியிலும், பல்வேறு இந்து அமைப்புகள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதை தொடர்ந்து, தன் பயணத்தை இந்திரா ரத்து செய்தார். ஆனால், காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள், சபரிமலையில் வேகமாக ஏற்பட்டு வருகின்றன. கூட்டமும், ஆண்டுக்கு ஆண்டு, அதிகரித்து வருகிறது. சன்னிதானத்தில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால், மீட்பு நடவடிக்கை என்பது இன்னும் கேள்விக்குறியாக இருந்து வருகிறது. சன்னிதானத்தில் இருந்து, பம்பைக்கு, 5 கி.மீ., துாரம் உள்ளது. எனவே, மிக அத்தியாவசியமான தேவைக்கு சன்னிதானம் அருகில் ஒரு ஹெலிகாப்டர் தளம் வேண்டும் என்பது கட்டயமாகியுள்ளது. இதற்கு ஒரு பக்கத்தில் எதிர்ப்பு இருந்தாலும், மறுபக்கம் அதற்கான பூர்வாங்க பணிகள் துவங்கியுள்ளன. உயர் போலீஸ் அதிகாரிகளும், தேவசம்போர்டின் பொறியாளர்களும் பாண்டித்தாவளத்தில் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை ஆய்வு செய்தனர். இது சரியான இடம் என்பதில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. எனினும் இங்குள்ள, 30 மரங்களை வெட்ட வேண்டும். இதற்கு வனத்துறையின் அனுமதி கிடைக்க வேண்டும். இந்த மரங்களுக்கு பதிலாக, வேறு இடத்தில் மரம் நட்டு வளர்க்கும் திட்டத்துடன், வனத்துறையை அணுக, தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. ஹெலிகாப்டர் தளம் வரும் பட்சத்தில், வி.வி.ஐ.பி-.,க்களுக்கு, ஐகோர்ட்டின் அனுமதியுடன் பயன்படுத்த முடியும் என்றும், அவசர கால தேவைகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.