ராமகிருஷ்ண மிஷன் சார்பில் ரூ. 513 கோடி வளர்ச்சிப்பணி
பெ.நா.பாளையம்: உலகம் முழுக்க, ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன் சார்பில் மருத்துவம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், 513 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளதாக, வித்யாலய செயலாளர் சுவாமி அபிராமானந்தர் பேசினார். பெரியநாயக்கன்பாளையத்தில் அன்னை ஸ்ரீசாரதா தேவியின், 164வது ஜெயந்தி விழா நடந்தது. விழாவையொட்டி, ஹோமம், வழிபாடு, பஜனை, பொதுக்கூட்டம் ஆகியன நடந்தன. இதில், வித்யாலய செயலாளர் சுவாமி அபிராமானந்தர் பேசியதாவது; மனத்துாய்மை இருந்தால், எல்லா வகை நன்மைகளும் நம்மை வந்தடையும். மன வேறுபாடு இல்லாமல் அனைவருடனும் பழக வேண்டும். இக்கருத்தைதான் அன்னை சாரதா தேவியார் தம் வாழ்வில் நிகழ்த்திக் காட்டினார். ராமகிருஷ்ண மிஷன் சார்பில் திரிபுராவில் கைலாஷ்கர், ஆந்திரா திருப்பதி உள்ளிட்ட பகுதிகளில் புதிய கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏழை, முதியோர், ஆதரவற்ற மக்களுக்காக, 16.85 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், நடமாடும் மருத்துவ வண்டிகள், மருத்துவ முகாம்களுக்காக, 191.48 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. பல்கலைகள், பள்ளி, முறையில்லா கல்வி மையங்கள், இரவு பள்ளிகள், பயிற்சி வகுப்புகளுக்காக, 248.96 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கிராமப்புற மற்றும் பழங்குடியின மேம்பாட்டு திட்டங்களுக்காக, 58.66 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, சுவாமி அபிராமானந்தர் பேசினார். விழாவில், வித்யாலய கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.