மாமல்லபுரம் தேர் சீரழிவை தவிர்க்க வலிமையான கூரை வருமா?
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில் தேரின் பாதுகாப்பு கூரை, சூறாவளி காற்றில் சேதமாவதை தவிர்க்க, வலிமையான கூரையை நிரந்தரமாக அமைக்க, கோரிக்கை எழுந்துள்ளது. மாமல்லபுரத்தில் ஸ்தலசயன பெருமாள் பிரசித்தம். சித்திரை பிரம்மோற்சவம், பூதத்தாழ்வார் அவதார உற்சவம் ஆகிய விழாக்களின்போது, சுவாமி தேர் உற்சவத்திற்கு, அழகிய மரத்தேர் பயன்படுத்தப்படுகிறது. கோவிலுக்கென தனி தேர் இல்லாத நிலையில், சில ஆண்டுகளுக்கு முன், பக்தர் ஒருவரின் நன்கொடையாக தேர் பெறப்பட்டது. கோவில் வளாக வட கிழக்கு பகுதியில் நிறுத்தப்பட்ட இந்த தேரின் பாதுகாப்புக்கு, தகடுகளால் கூரை வேயப்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே சேதமடைந்திருந்த தகடுகள், வர்தா புயலால் மேலும் சேதமடைந்தன. இதையடுத்து, தற்காலிக பாதுகாப்புக்காக, பாலிதீன் படுதாவால் போர்த்தப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் அமைக்கப்படும் தேர் கூரை வலுவானதாக இருந்தால் நல்லது என, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.