உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மால கோவிலில் பராமரிப்பு... தீவிரம்! திருவிழாவுக்காக தயாராகிறது

மால கோவிலில் பராமரிப்பு... தீவிரம்! திருவிழாவுக்காக தயாராகிறது

உடுமலை: கால்நடைகளின் காவல் தெய்வமான ஆல்கொண்டமால் கோவிலில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பராமரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது. உடுமலை அருகே சோமவாரப்பட்டியில் ஆல்கொண்டமால் கோவில் அமைந்துள்ளது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவிலில் ஆண்டுதோறும் பொங்கலையொட்டி, கால்நடைகளுக்கான திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழாவன்று திருப்பூர், உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வரும் பொதுமக்கள் தங்கள் கால்நடைகள் நோய்கள் நொடிகளின்றி ஆரோக்கியத்துடன் இருக்கவும்; கால்நடை வளம் பெருகவும் பொம்மைகள் வைத்து வழிபடுவர். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் விவசாயிகள் வளர்க்கும் காளைகளை வண்டியில் பூட்டி வந்து இக்கோவிலில் விசேஷ பூஜை நடத்தி வருகின்றனர்.

இதனால் கால்நடைகள் ஆரோக்கியத்துடனும்; விவாசாயம் செழித்து வளரும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் பொங்கல், மாட்டுபொங்கலன்று கால்நடைகள் ஈனும் கன்று குட்டிகளை விவசாயிகள் இக்கோவிலுக்கு தானமாக வழங்கி வருகின்றனர். இதனால் தைப்பொங்கலின் நான்கு நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவிலில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவில் சுற்றுச்சுவர், சிலைகளுக்கு சுண்ணாம்பு அடித்தல், கடைகள் அமைக்கப்படும் இடங்கள் மற்றும் மக்கள் கூடும் மைதானங்களை சுத்தம் செய்தல் உட்பட பல்வேறு பணிகளும் நடைபெற்று வருகிறது.

புனரமைக்க வேண்டும்: இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் கோவிலுக்கு ஆண்டுதோறும் கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது. ஆனால் கிடைக்கும் வருவாய்கேற்ற வகையில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதில்லை என்பது பக்தர்களின் கருத்தாக உள்ளது. கோவிலுள்ள கால்நடைகளின் சிலைகள், திட்டுகள் மற்றும் சுற்றுச்சுவர்களில் ஆங்காங்கே விரிசலும், உடைந்தும் காட்சியளிக்கிறது. கடந்தாண்டு புதுப்பிக்கப்பட்ட தரைத்தளமும் பெயர்ந்து வருகிறது. அதோடு கோவிலின் முன்மண்டபத்தில் மழைக்காலத்தில் தண்ணீர் இறங்கி, அதன் உறுதித்தன்மை வலுவிழந்து காணப்படுவதுடன், மண்டபத்தை தாங்கி நிற்கும் துாணும் விரிசல் விழுந்து வருவதால் கோவிலின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

திருவிழாவுக்காக மட்டுமே கோவிலினை புதுப்பிக்காமல் ஆண்டுதோறும் அதன் உறுதித்தன்மை பாதிக்காத வகையில், சிதிலமடையும் பகுதிகளை ஆய்வு செய்து புனரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இல்லையென்றால் வரலாற்று சிறப்புமிக்க கோவிலின் சிறப்புகள் பற்றி இனிவரும் தலைமுறைகளுக்கு தெரியாமல் போவதற்கு வாய்ப்புள்ளது. கோவிலுக்கு கிடைக்கும் நிதியை வைத்து புனரமைப்பு பணிகளை மேற்கொண்டால் கோவிலினை சிறப்பாக பராமரிக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !