மகர ஜோதி வரை துளசி வாசம் தான்!
ஆர்.கே.பேட்டை : கார்த்திகை முதல் தேதி முதல், வரும் தை மகரஜோதி தரிசனம் வரை, துளசி மாலைக்கு சந்தை வாய்ப்பு சிறப்பாக இருக்கும். இதனால், துளசி பயிரிட்ட விவசாயிகள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
கார்த்திகை முதல் தேதி துவங்கி, தை முதல் தேதி வரை அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொள்வது வழக்கம். தினசரி நடக்கும் படி பூஜையில், கற்பூர ஜோதியும், துளசி மாலையும் நிச்சயம் இடம் பெறும். இதனால், ஐந்து வாரங்களசாக, பூ சந்தைக்கு வரும் மலர்களுடன் துளசியும் முக்கிய இடம் பிடித்துள்ளது.திருத்தணி மற்றும் சோளிங்கர் சந்தைக்கு அதிகளவில் வியாபாரிகள் துளசியை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, பைவலசா பகுதியில் துளசியை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். பூக்கள், கிலோ கணக்கில் விற்பனை செய்யப்படும் நிலையில், துளசி மூட்டையாக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு மூட்டை துளசி, 350 ரூபாய் என, விற்பனை ஆகிறது. மார்கழி மாதம் பெருமாள் கோவில்களில், நித்ய பூஜைகள் சுப்ரபாதம் சேவையுடன் நடந்து வருகிறது.