மொக்கணீஸ்வரர் கோவிலில் புதிய நந்தவனம் அமைப்பு
அவிநாசி : அவிநாசி அருகே மொக்கணீஸ்வரர் கோவிலில், உழவாரப்பணி மற்றும் நந்தவனம் அமைக்கப்பட்டது. பெங்களூரு ஸ்ரீ குருகுலம் ஆகம வித்யார்த்திகள் சேவா சமிதி சார்பில், அவிநாசி அருகே குட்டகம், மீனாட்சி அம்பிகை உடனமர் மொக்கணீஸ்வரர் கோவிலில், உழவாரப்பணி மற்றும் உலக நன்மை வேண்டி ஸ்ரீ ருத்ர ஹோமம், ஸ்ரீ ருத்ராபிஷேகம் நடந்தது. ஸ்ரீஸ்ரீ குருகுல வேத ஆகம சமஸ்கிருத பாடசாலை முதல்வர், சுந்தரமூர்த்தி சிவம் முன்னிலை வகித்தார். கலெக்டர் ஜெயந்தி துவக்கி வைத்தார். பள்ளி மாணவர்களுக்கு, நோட்டு, புத்தகங்கள் வழங்கி, கோவில் நந்தவனத்தில், ருத்ராட்ச மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.
கோவில் சுத்தம் செய்யப்பட்டு, சுவர்களுக்கு வர்ணம் பூசப்பட்டது. நந்தவனம் அமைக்கப்பட்டது. இரண்டாம் நாள், வேக ஆகம பாராயணம் மற்றும் திருவாசகம் முற்றோதலுடன், ஸ்ரீ ருத்ர ஹோம ஆகம பூஜைகள், ஸ்ரீ ருத்ர அபிஷேகம் நடந்தது. பூஜைகளுக்கு, கண்ணப்ப குருக்கள் முன்னிலை வகித்தார். கூனம்பட்டி ஆதீனம் ராஜசரவண மாணிக்க வாசக சுவாமிகள், வாகீசர் மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஸ்ரீ குருகுலம் ஆகம வித்யார்த்திகள் சேவா சமிதியினர் கூறுகையில், ""ஸ்ரீ ரவிசங்கர் ஆசியுடன், பெங்களூரு வேத ஆகம சமஸ்கிருத பாடசாலையில், தேர்ச்சி பெற்ற சிவாகம வித்யாநிதி மாணவர்கள் இணைந்து, ஸ்ரீ குருகுலம் ஆகம வித்யார்திகள் சேவாசமிதியை துவக்கி, ஆண்டு தோறும் பழமையான கோவில்களில் உழவாரப்பணி, நந்தவனம் அமைத்தல் உட்பட, சமூக பணிகள் செய்து வருகிறோம், என்றனர்.