புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் வழிபாடு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், புத்தாண்டை முன்னிட்டு, அதிகாலையில் நடந்த சிறப்பு பூஜையில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, கோவில் தங்க கொடி மரம் அருகில் உள்ள சம்பந்த விநாயகருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்யப்பட்டு, தங்க கவசம் சாத்தப்பட்டது. தொடர்ந்து, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் உற்சவர் மற்றும் மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. உற்சவருக்கு வெள்ளி அங்கி, மூலவருக்கு தங்க நாகாபரணம் சாத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், நவக்கிரக சன்னதியில் பக்தர்கள் நெய் தீபமேற்றி, பின் கிரிவலம் சென்றனர். ஆந்திரா, கேரளா, கர்நாடகாவை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று சுவாமி தரிசனத்திற்கு வந்ததால், கோவிலில் கூட்டம் அலை மோதியது. ஒரு மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.