சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா உற்சவ கொடியேற்றம்
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழி ஆருத்ரா மகா தரிசன உற்சவ கொடியேற்று விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு, சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு, நேற்று அதிகாலை, சிறப்பு அபிஷேக, அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி, பிரகாரம் வலம் வந்து, கொடி மரம் சன்னிதியில் எழுந்தருளினர். கொடி மரத்தடியில், உற்சவ ஆச்சாரியார் நடராஜ ரத்தின தீட்சிதர், அட்ஷராயருக்கு சிறப்பு பூஜை செய்து, பன்னிரு திருமுறை வழிபாடு நடந்தது. பின், காலை, 6:45 மணிக்கு, உற்சவக்கொடி ஏற்றப்பட்டு, மகா தீபாராதனை வழிபாடு நடந்தது. வரும், 11ல், அதிகாலை, 2:00 மணிக்கு, சிவகாமசுந்தரி அம்மன் சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகமும் நடக்கிறது. இதை தொடர்ந்து, ஆயிரங்கால் மண்டபத்தில், திருவாபரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பின், சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி, மாலை, 4:00 மணிக்கு, ஆருத்ரா மகா தரிசனம், சித்சபை பிரவேச தரிசனம் நடக்கிறது.