உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தியாகராஜ்யம் இசை நாட்டியம் வித்தியாசமான புதுமை படைப்பு

தியாகராஜ்யம் இசை நாட்டியம் வித்தியாசமான புதுமை படைப்பு

சென்னை: மார்கழி இசை உற்சவத்தையொட்டி, பிரம கான சாபாவின் சார்பில், தியாகராஜரின், 250வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, மயிலாப்பூர் சிவகாமி பெத்தாச்சி அரங்கில், ’தியாகராஜ்யம்’ இசை, நாட்டிய விழா நடந்தது. கர்நாடக இசை பாடகி, தேவிநேத்தியார் தியாகராஜரின் கீர்த்தனைகளை பாட, சென்னையை சேர்ந்தவரும், லண்டனில் வசிப்பவருமான, பிரபல பரத நாட்டிய கலைஞர், திவ்யா கஸ்துாரி பரதம் ஆடி அசத்தினார். ’கிரிராஜசுதா, சாதிஞ்சனே, பாகாயநயா, நகுமோமோ, பாசி ராமச்சந்திரா, சரசீருகநயனே’ என, துவங்கும் தியாகராஜரின் கீர்த்தனைகளுக்கு, திவ்யா அற்புதமாக நடனமாடினர். நிறைவு பாடலாக, தியாகராஜரை போற்றி, கர்நாடக இசை ஜாம்பவான், டி.வி.கோபாலகிருஷ்ணன் இயற்றிய, ’தில்லானா’ பாடலுக்கு, திவ்யா கஸ்துாரியின் நடனம் புதுமையாக அமைக்கப்பட்டிருந்தது.

’தியாகராஜ்யம்’ இசை நாட்டியம், எளிமையாவும், ரசிகர்களை ஈர்க்கும் விதத்திலும் வடிவமைக்க பட்டிருந்தால், தியாகராஜரின் கவித்துவம், இறை பக்தி, இசையை, ரசிகர்கள் உணர்வு பூர்வமாக ரசித்து மகிழ்ந்தனர். இசை, நாட்டியம் துவங்கியதிலிருந்து முடியும் வரை, அனைத்து பாடல்களுக்கும், ரசிகர்கள் கைதட்டல் தொடர்ந்தது. மிருதங்கம் ராமகிருஷ்ணன், பத்மநாபன், வயலின் சிவராமன், நட்டுவாங்கம் சுபஸ்ரீ, கீ போர்டு விக்னேஷ்வர் அழகாக, அருமையாக வாசித்தனர். ’தியாகராஜ்யம்’ குறித்து, திவ்யா கஸ்துாரி கூறும்போது, ’வெளிநாடுகளில் இசை, நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறேன். கர்நாடக இசையை, உலகமெங்கும் எளிமையாக, அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும் என்பது, என் ஆர்வம். ’இதற்காக, புதுமை படைப்புகளை உருவாக்கி, நடத்தி வருகிறேன். ’தியாகராஜ்யம்’ வடிவமைக்கப்பட்ட போதே, ரசிகர்களிடம் வரவேற்பு அமோகமாக இருக்கும் என நினைத்தோம்; நினைத்தது நடந்தது. இசை, நடன துறையில், மேலும், மேலும் புதுமைகளை படைக்க ரசிகர்களின் வரவேற்பு, துாண்டுதலாக இருக்கும்’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !