உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாச்சியார்கோயிலில் கண்கொள்ளகாட்சியாக நடந்த கல்கருட சேவை!

நாச்சியார்கோயிலில் கண்கொள்ளகாட்சியாக நடந்த கல்கருட சேவை!

தஞ்சாவூர்: கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோயிலில், மார்கழி திருவிழாவை முன்னிட்டு, கண்கொள்ளகாட்சியாக கல்கருட சேவை விழா நேற்று நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவிலில் சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் திருமங்கையாழ்வாரால் 100 பாசுரங்களால் மங்களா சாசனம் செய்யப்பட்டுள்ள தலம் ஆகும். கல்கருடபகவான் தாயாரை தேடி இத்தலத்தில் இருப்பதை அறிந்து, பெருமாளிடம் தெரிவித்து பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமணம் நடத்திய பெருமை பெற்றவராவார்.

சிறப்புமிக்க இத்தலத்தில், ஆண்டிற்கு இரண்டு முறை தமிழ்மாதங்களான மார்கழி  மற்றும் பங்குனியில் நடைபெறும் கல்கருடசேவை உலக பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் முக்கோடி தெப்பத் திருவிழா ஆண்டுதோறும்  நடைபெறும்.   அதேபோல் மார்கழி பெருவிழா 10 நாட்கள் நடைபெறும். கடந்த 1ம் தேதி மார்கழி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முதல்நாள் சூரியபிரபை காட்சி அளித்து திருவீதியுலா நடைபெற்றது. விழா நாட்களில்  பல்லக்கு, யாழி, கிளி, சேஷ, வெள்ளி யானை  உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பெருமாள் மற்றும் தாயார் எழுந்தருளி வீதியுலா புறப்பாடு நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கல்கருட சேவை நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் மூலவராகவும், உற்சவராகவும் அமைந்துள்ள கல்கருட   பகவான் புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளி 4, 8, என 64 பேர்கள் வரை படிப்படியாக உயர்ந்து துாக்கி மூலவர் சன்னதியில் இருந்து வாகனம் மண்டபத்திற்கு   ஆயிரக்கணக்காண பக்தர்கள் மத்தியில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு வருகிற 8ம்  தேதி காலை 5 மணிக்கும், வருகிற 9ம் தேதி மாலை 8 மணிக்கு பெருமாள் மற்றும் தாயார் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட இந்திர விமானத்தில் எழுந்தருளி புறப்பாடு நடைபெறுகிறது. நிறைவு நாள் நிகழ்ச்சியாக சீனிவாசபெருமாளுடன் வஞ்சுவல்லிதாயார் படிச்சட்டத்தில் திருவீதியுலா 10ம் தேதி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !