உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை கோவில் கும்பாபிஷேக பணி: கலெக்டர் ஆலோசனை

திருவண்ணாமலை கோவில் கும்பாபிஷேக பணி: கலெக்டர் ஆலோசனை

தி.மலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பணி குறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடன், கலெக்டர் பிரசாந்த்.மு.வடநேரே ஆய்வு நடத்தினார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பிப்., 6ல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக, 108 யாக சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகள், ஏழு கோடியே, 19 லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்திற்கு பல்வேறு பகுதியிலிருந்து, பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், வரும் பக்தர்களின் வசதிக்காக, பாதுகாப்பு, குடிநீர், பஸ், ரயில், மின்சாரம், கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்வது குறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடன் கலெக்டர் பிரசாந்த்.மு.வடநேரே, நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆலோசனை நடத்தினார். இதில், ஐந்தாம் பிரகாரத்தில், 108 யாக குண்டம் அமைத்தல், கும்பாபிஷேகத்தை பக்தர்கள் எளிதாக பார்க்கும் வகையில் முக்கிய இடங்களில், 25 எல்.இ.டி., மெகா ஸ்கிரீன் அமைத்தல், மருத்துவ முகாம் அமைத்தல், சிவாச்சாரியார்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், பிப்.,6ல் உள்ளூர் விடுமுறை அறிவித்தல், கோவிலில் சமய சொற்பொழிவு நிகழ்ச்சி, இன்னிசை கச்சேரி, வாத்திய இசை, ஆகியவை நடத்த ஏற்பாடு செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஆய்வு கூட்டத்தில், ஆர்.டி.ஓ., உமாமகேஸ்வரி, எஸ்.பி., பொன்னி, கோவில் இணை ஆணையர் ஹரிப்பிரியா உட்பட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !