சாஸ்தா நகர் அய்யப்பா ஆசிரமத்தில் மகர விளக்கு பூஜை துவக்கம்
சூரமங்கலம்: சேலம் பெங்களூர் பைபாஸ் சாலையில் உள்ள, அய்யப்பா ஆசிரமத்தில், மகர விளக்கு பூஜை, ஜன.7 துவங்குகிறது.
சேலம், குரங்குச்சாவடி, சாஸ்தா நகரில் உள்ள அய்யப்பா ஆசிரமத்தில், ஜன.6 முதல், வரும், 14 வரை, பல்வேறு பூஜைகள் நடக்கின்றன. அதிகாலை, 5:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, மஹா கணபதி ஹோமம் நடக்கிறது. 9:00 மணிக்கு, அய்யப்பன் லட்சார்ச்சனை விளக்கு பூஜை;
மாலை, 6:30க்கு, கேரள பஞ்ச வாத்தியங்களுடன் கொடியேற்றம் நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு, கணபதிக்கு சிறப்பு கலச அபிஷேகம், அய்யப்பனுக்கு, பஞ்சகவ்யம் அபிஷேகம் நடக்கும். வரும், 12 வரை, தினமும் பல்வேறு வகை அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடக்கும்.
இதையடுத்து, 13 காலை, 8:00 மணிக்கு, பகவதிக்கு திரிகால பூஜை ஆரம்பம்; 10:00 மணிக்கு, அய்யப்பனுக்கு அஷ்டாபிஷேகம், 108 சங்கு பால் அபிஷேகம், 108 இளநீர் அபிஷேகம், 108 கலச அபிஷேகம் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு, டாடா காலனியில் இருந்து, பெண்கள் தாலப்பொலி விளக்கேந்தி, சாஸ்தா நகருக்கு, ஊர்வலம் வருகின்றனர். அடுத்து, 14 காலை, 7:00 மணிக்கு,
ஆராட்டுக்காக, உற்சவ மூர்த்தி, பவானி அழைத்து செல்லப்படும். 8:00 மணிக்கு, கூடுதுறை காவிரி ஆற்றில், ஆராட்டு பூஜை மற்றும் மஞ்சள் நீராடுதல் நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு, அண்ணாபுரம் ஓம் சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, கேரள பஞ்ச வாத்தியங்களுடன், அய்யப்பன், குதிரை வாகனத்தில் புஷ்ப அலங்காரத்துடன், திரு ஆபரண பெட்டி ஊர்வலமாக, ஆசிரமத்திற்கு எடுத்துவரப்படும். மாலை, 6.30க்கு, மகர விளக்கு பூஜை; 7:00க்கு மகர விளக்கு, மகரஜோதி, திரு ஆபரண தரிசனம், மகா தீபாராதனை, பகவதிசேவா நடக்கிறது. மேலும், மாலையில் தினமும், ஆன்மிக நிகழ்ச்சி நடக்கும். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.