ஆண்டாள் கோயில் சொர்க்கவாசல்: ஸ்ரீவி.,யில் ஜன.8 திறக்கப்படுகிறது
ஸ்ரீவில்லிபுத்துார்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டுஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள்கோயிலில் நாளை காலை 6:30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது.
இதையொட்டி அதிகாலை 4:00 மணிக்கு பெரியபெருமாள் தோளுக்கினியானிலும், ஆண்டாள், ரெங்கமன்னார் சேர்த்தியிலும் வேதவிண்ணப்பமாகி மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, 6:30 மணிக்கு சொர்க்கவாசல் வழியாக எழுந்தருள்கிறார்கள். அப்போது ஆழ்வார்கள் எதிர்கொண்டு சேவித்து, கந்தாடை வீதி வழியாக எழுந்தருளி ராப்பத்து மண்டபத்திற்கு வந்தடைகிறார்கள்.
அங்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம், திருவாய் மொழித்துவக்கம், திருவாராதனம், அரையர் வியாக்யானம், சேவாகாலம், தீர்த்தகோஷ்டி முடிந்து, மாலை 4 :00 மணிக்கு மூலஸ்தானம் புறப்படுகிறார்கள். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல்அலுவலர் ராமராஜா தலைமையில் கோயில் அலுவலர்கள் செய்துள்ளனர். மேலும், ஆண்டாள் கோயிலில் முதல் ஆண்டாள் மார்கழி எண்ணெய்காப்பு உற்சவம் துவங்குகிறது.
இதை முன்னிட்டு ஜன.7 காலை 9:00 மணிக்கு ஆண்டாள் தங்கப்பல்லக்கில் மாடவீதிகள் எழுந்தருள, ராஜகோபுர வாசலில் போர்வை படிகளைந்து திருவடி விளக்கமும், மதியம் 3:00 மணிக்கு திருமுக்குளத்தில் எண்ணெய்காப்பு சேவையும் நடக்கிறது.