உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் அனைத்து சேவைகளும் இனி... ஆன்லைன்!

திருத்தணி முருகன் கோவிலில் அனைத்து சேவைகளும் இனி... ஆன்லைன்!

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள் சிரமமின்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு வசதியாக அனைத்து சேவைகளும், ஆன்லைன் இனைய தளம் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பணமில்லா பரிவர்த்தனைக்காக, இ-உண்டியல் காணிக்கையை, ஸ்வைப்பிங் மிஷின் மூலம் செலுத்தும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது. திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிபட்டு செல்கின்றனர். கோவிலில் மூலவருக்கு பஞ்சாமிர்தம், சந்தன காப்பு, சகஸ்ராம அர்ச்சனை, விபூதி, பன்னீர், பால், சந்தனம் மற்றும் இளநீர் போன்ற அபிஷேகங்கள் மற்றும் தங்க கிரீட அலங்காரம் போன்ற சேவைகளும் செய்யப்படுகின்றன.

தங்க தேர், வெள்ளி தேர், வெள்ளி மயில் வாகனம், கேடய உற்சவம், கல்யாண உற்சவம் போன்றவையும் உற்சவர் முருகப்பெருமானுக்கு நடத்தப்படுகின்றன. மேற்கண்ட சேவைகளை, குறைந்தபட்சம், இரு நாட்களுக்கு முன்னதாகவே கோவில் நிர்வாக அலுவலகம் அல்லது மலைக்கோவிலுக்கு நேரில் வந்து, பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். இதுதவிர, தேவஸ்தான குடில்கள் மற்றும் அறைகளில் தங்குவதற்கும், முன்பதிவு செய்ய வேண்டும். இதனால், பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றவும், மேற்கண்ட சேவைகள் செய்ய வெளியூர் பக்தர்கள் முன்பதிவு செய்வதற்கு ஒரு நாளும், சேவை தினம் ஒரு நாள் என, இரண்டு நாட்கள் திருத்தணி மலைக் கோவிலுக்கு வந்து செல்ல வேண்டியிருந்தது. இதனால் பக்தர்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், கடந்தாண்டில் மார்ச் மாதம் முதல், முதற்கட்டமாக தேவஸ்தான அறைகள், குடில்கள், ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் முறை கொண்டு வரப்பட்டது. இதற்கென,www.tirutanigaimurugan.tnhrce.inஎன்ற இணையதள முகவரியையும் கோவில் நிர்வாகம் உருவாக்கியது. இதையடுத்து, அபிஷேகம், வாகன சேவைகளும் ஆன்லைன் மூலம் பதியப்பட்டது.

கடந்த மாத இறுதியில், மூலவரை தரிசிக்க, சிறப்பு தரிசனத்திற்கு செல்லும், 100 ரூபாய் டிக்கெட்டும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யவும், உண்டியல் காணிக்கை செலுத்துவதற்கு பணமில்லாத பரிவர்த்தனை கொண்டு வரும் நோக்கில், (இ-உண்டியல் - ஸ்வைப்பிங் மிஷின் மூலம் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வசதியும் கொண்டு வரப்பட்டது. தற்போது, கோவிலில் நடக்கும் சேவைகள், அன்னதானம் மற்றும் தரிசன டிக்கெட் என, அனைத்தும், ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் நடைமுறையை கோவில் நிர்வாகம் கொண்டுள்ளது. தற்போது, மலைக்கோவிலுக்கு செல்லும் பேருந்து டிக்கெட் கட்டணம் மட்டும் ஊழியர்களால் வழங்கப்படுகிறது. அனைத்து திட்டங்கள் மற்றும் சேவைகளை ஆன்லைன் மூலம் கோவில் நிர்வாகம் கொண்டு வந்ததால், வெளியூர் மற்றும் அண்டை மாநில பக்தர்கள் எளிதாக முன்பதிவு செய்து, கூட்ட நெரிசல் மற்றும் பதற்றம் இல்லாமல் மூலவரை வழிபடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !