ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு சுவாமிக்கு திருக்கல்யாணம்
கரூர்: கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு, சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. கரூர், கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனம் இன்று
நடக்கவுள்ளது. இதையடுத்து, நேற்று அலங்காரவள்ளி, சவுந்திரநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வருக்கு, கோவிலுள்ள உட்பிரகார மண்டபத்தில் திருக்கல்யாணம் நடந்தது. இதில், முறைப்படி சுவாமிக்கு சீர்வரிசைகள் வைத்து, மாலைகள் மாற்றுப்பட்டு திருக்கல்யாண
வைபவத்தை நடத்தினர். திருக்கல்யாணம் முடிந்த பின், பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு ஆகியன பிரசாதமாக வழங்கப்பட்டன. மேலும், நேற்று பிரதோஷம் என்பதால், மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்கள் மற்றும் பல்வேறு கோவில்களில் உள்ள நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள், நந்தி பகவானின் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.