காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆருத்ரா உற்சவ விழா: பக்தர்கள் பரவசம்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நடந்த ஆருத்ரா உற்சவ விழாவில், அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடும், காலையில் சுவாமி புறப்பாடும் நடந்தன.
மார்கழி மாதம், திருவாதிரை நட்சத்திர பவுர்ணமியன்று, ஆண்டு தோறும் ஆருத்ரா உற்சவம் அனைத்து சிவாலயங்களிலும் நடைபெறும். கோவிலில் உள்ள நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் மற்றும் சுவாமி ஊர்வலம் நேற்று காலை நடந்தது. காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள நடராஜர் அலங்கரிக்கப்பட்டு நான்கு ராஜவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், கச்சபேஸ்வரர், முத்தீஸ்வரர், சத்யநாத சுவாமி, கணிண்டீஸ்வரர், பணாமுடீஸ்வரர், இதை தவிர, சித்ரகுப்தர், ஆதிகாமாட்சி, கரிக்கினில் அமர்ந்தவள், மூங்கில் மண்டபம் விநாயகர் உட்பட பல கோவில் உற்சவர், காஞ்சி நகர மக்கள், பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, ஆறுமுக சுவாமிக்கும், நடராஜ பெருமானுக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின், சண்முகர் அரைக்கட்டு நிகழ்ச்சியில் மூன்று முறை வெளியே புறப்பாடு சென்று வந்தார். இதைத்தொடர்ந்து, நேற்று அதிகாலையில் சிறப்பு அலங்காரத்தில் சண்முகரும், நடராஜ பெருமானும், 16 கால் மண்டபத்தில் ஒருசேர எழுந்தருளி, பின் மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். ஆருத்ரா அன்று சண்முகரும், நடராஜரும் பக்தர்களுக்கு ஒன்றாக காட்சியளிப்பது இங்கு சிறப்பானதாகும்.
ஸ்ரீபெரும்புதுார்: குன்றத்துார் அடுத்த சோமங்கலம், காமாட்சி அம்மன் உடனுறை சோமநாதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நவகிரக சந்திர தலமாக விளங்கும் இந்த கோவிலில் ஆருத்ரா தரிசனம் நேற்று விமரிசையாக நடந்தது. சதுரதாண்டவ நிலையில், நடராஜர் திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
திருக்கழுக்குன்றம்: மார்கழி மாதத்தில் சிவன்கோவில்களில் ஆருத்ரா விழா கொண்டாடப்படுகிறது. பிரசித்தி பெற்ற சமய குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற தலமான திருக்கழுக்குன்றத்தில் தாழக்கோவிலான பக்தவச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு விஷேச அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து நடராஜர் மற்றும் சிவகாமி தாயாருடன் மலர் அலங்காரத்தில் முக்கிய வீதிகளில் வீதிஉலா வந்தார். மேலும், 2ம் தேதியிலிருந்து மாணிக்கவாசகர் விழா நடந்து வந்தது. இந்த விழாவின் நிறைவும் நேற்று நடந்தது. கடைசி நாளான நேற்று நடராஜருடன் இவரும் வீதிஉலாவில் வந்தார். வழியில் நின்ற பக்தர்கள் அர்ச்சனை செய்து சுவாமியைதரிசனம் செய்தனர்.