ராமர் பாதம் பட்ட கல்: உத்திரமேரூரில் வழிபாடு
உத்திரமேரூர் : ராமபிரான் திருப்பாதம் பட்ட திருக்கல்லை, உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் வைத்து, பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். ராமாயணம் புராணத்தின் வரலாறு படி, சீதையை ராவணன் இலங்கைக்கு கடத்தி சென்று சிறை வைத்திருந்த போது, ராமபிரான் சீதையை மீட்க, கடல் வழியாக பாலம் அமைத்து, இலங்கைக்கு சென்றதாக கூறப்பட்டுள்ளது. கடலில் பாலம் அமைக்க, ராமபிரான் பயன்படுத்திய கற்களை, ராமர் பாதம் பட்ட கல் என, புனிதமாக கருதி, பக்தர்கள் வழிபடுகின்றனர். அத்தகைய புனித கல், உத்திரமேரூர் நகர இந்து முன்னணி தலைவர், சண்முகம் தலைமையில், ராமேஸ்வரத்தில் இருந்து, நேற்று முன்தினம் உத்திரமேரூர் பகுதிக்கு மக்கள் வழிபாட்டிற்காக கொண்டு வரப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் இப்புனித கல்லை வைத்து, அப்பகுதி யினர் பூக்கள் துாவி, மஞ்சள் குங்குமமிட்டு, பூஜை செய்தனர். கோவிலுக்கு வந்த அனைத்து பக்தர்களும் ராமர் பாதம் பட்ட புனித கல் என, பக்தியோடு தொட்டு வணங்கி, தீபம் ஏற்றி, வழிபாடு செய்தனர்.