உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் முழுமை பெறாத மண்டபம்

உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் முழுமை பெறாத மண்டபம்

கீழக்கரை: பழமையான புராதன சிறப்புகளையும், வரலாற்று நிகழ்வுகளை தன்னகத்தே பெற்ற உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலின் முதல் பிரகார மண்டப பணிகளை முடிக்க நிதியின்றி தவிக்கின்றனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த சிவன் கோயிலில் பாண்டிய மன்னர், சேதுபதி மன்னர்களால் திருப்பணிகள் நடந்துள்ளது. மங்களநாதர் சுவாமியின் கருவறையை சுற்றியுள்ள தெற்கு, மேற்கு, வடக்கு பகுதிகளை உள்ளடக்கிய முதல் பிரகார மண்டபம் திறந்த வெளியாக உள்ளது. 13வது மாநில நிதிக்குழுவில் 75 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கருவறையை ஒட்டிய சீதளி மண்டபத்தின் பணிகள் கடந்த 2011ல் துவங்கி 2015ல் நிறைவு பெற்றது. முதல் பிரகாரத்திற்கு வேலைப்பாடுகளுடன் கூடிய கருங்கல் துாண்கள், மேற்கூரை கற்கள், சித்திர மண்டப கால், பால் கல், தரைக்கல், சுருக்கி, தட்டோடு செய்து முடிக்க 2 கோடிக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரத்தை சேர்ந்த பக்தர் சிவராமன் கூறுகையில், மங்களநாதர் சுவாமியை தரிசனம் செய்து விட்டு, இடதுபுறமாக கோயிலை வலம் வருவதற்கு முதல் பிரகாரம் கருங்கல் மேற்கூரை இல்லாமல் திறந்த வெளியாக இருப்பது வேதனையளிக்கிறது. மழைகாலங்களில் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாகிறது. மழை, வெயிலில் இதர துாண்களில் கருமை படிகிறது. எனவே, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பிரகார பணிகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், திட்ட மதிப்பீடு தயார் செய்து, மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கைக்காக காத்திருக்கிறோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !