கூடலழகிய பெருமாள் கோயிலை கட்டிய அரச குடும்பத்தினர் வருகை
கூடலூர் : கூடலூரில் வரலாற்று சிறப்பு மிக்க கூடலழகிய பெருமாள் கோயிலை கட்டிய, பூனையாற்று தம்பிரான் அரசர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் நேற்று கோயிலுக்கு வந்தனர். தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள கூடலழகிய பெருமாள் கோயில் 1200 ஆண்டுகளுக்கு முந்தய வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இக்கோயிலை பூனையாற்று தம்பிரான் என்ற அரசர் கட்டியதாக வரலாறு. இக்குடும்ப பரம்பரையைச் சேர்ந்தவர்கள் கேரளாவில் பந்தளம் அருகில் உள்ள பூன்ஜையார் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
அரசரின் கொள்ளுப் பேரன், பேத்திகளான ஸ்ரீஜித், கோடா வர்மா, பிரேமசந்திரன், சுதாதேவி, சுதாவர்மா, சுவப்னா ஆகியோர் நேற்று கூடலழகிய பெருமாள் கோயிலுக்கு வந்தனர். இவர்களுக்கு கோயில் நிர்வாகம் மற்றும் நகர் நல சேவை சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயிலை கட்டிய அரசரின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் கோயிலுக்கு வந்த தகவல் அறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் கோயில் முன் திரண்டனர்.