உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / டாப்சிலிப்பில் பொங்கல் விழா

டாப்சிலிப்பில் பொங்கல் விழா

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, டாப்சிலிப்பில், முகாம் யானைகள் பங்கேற்ற பொங்கல் விழா நடந்தது. ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்சிலிப் வனச்சரகத்துக்கு உட்பட்ட கோழிகமுத்தி, சின்னாறு மற்றும் வரகழியார் முகாம்களில், 15 யானைகள் பராமரிக்கப்படுகின்றன. ஆண்டுதோறும், யானைகள் பங்கேற்கும் பொங்கல் விழா சிறப்பாக நடத்தப்படும். நடப்பாண்டு நேற்று, விழா கொண்டாடப்பட்டது. யானைகளை குளிக்க வைத்து அலங்கரித்து, கஜபூஜை நடந்தது. பொங்கலுடன் கரும்பு, தேங்காய் மற்றும் பழவகைகள் வழங்கப்பட்டன; யானைகளின் அணிவகுப்பு, பார்வையாளர்களை கவர்ந்தது. முதுமலையில் : முதுமலையில், புதிதாக அமைக்கப்பட்ட, நான்கு முகாம்களில் நடந்த பொங்கல் விழாவில், யானைகளுக்கு, சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில், கடந்த மாதம், இரு யானைகள் நோய் தாக்கி இறந்தன. இதையடுத்து, தெப்பக்காடு, அபயாரண்யம் பகுதிகளில் இருந்த முகாம், பாம்பேக்ஸ், மெதகல்வயல், பைசன்சாலை, ஈட்டிமரா பகுதிகளுக்கு, தற்காலிகமாக மாற்றப்பட்டது. நேற்று முன்தினம், முகாம்களில், ஆதிவாசி மக்கள் சார்பில், பொங்கல் விழா நடந்தது. பூஜை முடிந்தவுடன், இனிப்பு பொங்கல், பழங்கள் உட்பட, சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லாததால், அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !