காணும் பொங்கலை முன்னிட்டு கிராமங்களில் கோலாகலம்
கரூர் மாவட்டத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த, மூன்று நாட்களாக பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. காணும் பொங்கல் நாளான நேற்று, காந்திகிராமம், இ.பி., நகர் போன்ற பகுதியில், சிறுவர்களுக்கான ஓட்டம், ஸ்லோ சைக்கிள், கோழி பிடிக்கும் போட்டிகள் நடந்தன. சவுமியா என்ற பெண் கோழியை பிடித்ததால், அவருக்கு பரிசு வழங்கப்பட்டது. லாலாப்பேட்டை அடுத்த திம்மச்சிபுரத்தில், சிறுவர்களுக்கான, சோடா பாட்டில்களில் தண்ணீர் நிரப்புதல், இசை நாற்காலி, சிறுவர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள், ரஜினி நற்பணி மன்றம் மூலம் நடத்தப்பட்டது.
* குளித்தலை அடுத்த மருதூர், மேட்டுமருதூர், பரளி, கூடலூர், வலையப்பட்டி, இனுங்கூர், தோகைமலை போன்ற பகுதிகளில், சிறுவர், பெரியவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், கோலம், கட்டுரை, திருக்குறள் ஒப்பித்தல், பேச்சு, பாட்டு, நடனம், ஓட்டம், சாக்கு ஓட்டம், புதையல் எடுத்தல், ஸ்லோ சைக்கிள், லக்கி கார்னர், கயிறு இழுத்தல், பானை உடைத்தல், வலுக்குமரம் ஏறுதல், யானைக்கு கண் வைத்தல், கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆர்.டி.மலை சிவன் கோவில் முன், நாயக்கர் சமூகத்தை சேர்ந்தவர்கள், தேவர் ஆட்டம் ஆடி பொதுமக்களை கவர்ந்தனர்.
* கரூர் நகரில், கோவை சாலை, திருச்சி சாலை, ஜவஹர் பஜார் உள்ளிட்ட இடங்கள், கடந்த மூன்று நாட்களாக வெறிச்சோடிக் காணப்பட்டன. காமராஜ் மார்க்கெட் உட்பட சில இடங்களில் நேற்று ஓரிரு கடைகள் மட்டுமே திறந்திருந்தது.
* குளித்தலை அடுத்த ஆர்.டி.மலையில், ஜல்லிக்கட்டு அனுமதி மறுக்கப்பட்டதால், கடந்த, 5 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்நிலையில், நேற்று மாலை வழக்கம் போல் சுவாமி காளை மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளை, அழகாபுரி கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர். பின், விராச்சிலேஸ்வரர் மலைக்கோவிலை சுற்றி அழைத்து வந்து, விநாயர் கோவில் முன்பாக வழிபட்டனர். தொடர்ந்து, சுவாமி காளைகள், ஜல்லிக்கட்டு காளைகளை கயிற்றுடன் ஓடவிட்டனர். இதில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.