வெளிநாட்டினரை கவர்ந்த நகரத்தார் செவ்வாய் பொங்கல்
சிவகங்கை: தை முதல் செவ்வாய் கிழமையான நேற்று சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் நடந்த நகரத்தாரின் செவ்வாய் பொங்கல்’ வெளிநாட்டினரை கவர்ந்தது. இதற்காக ஏற்கனவே இப்பகுதியைச் சேர்ந்த நகரத்தார்களில் திருமணமானோரை ஒரு புள்ளியாக கணக்கிட்டு 911 குடும்பத்தினரிடம் வரி வசூலித்தனர். தொடர்ந்து அவர்களது பெயரை சீட்டில்’ எழுதி பானையில் குலுக்கி ஒரு குடும்பத்தினரை தேர்வு செய்தனர். அந்த குடும்பத்தினர் நேற்று மாலை 4:35 மணிக்கு நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோயில் முன் முதல் நபராக பொங்கல் வைத்தனர். தொடர்ந்து மற்ற 910 நகரத்தார், மற்ற சமூகத்தைச் சேர்ந்த 250 பேரும் பொங்கல் வைத்தனர். 100க்கும் மேற்பட்ட கிடா வெட்டி, அபிஷேகம் செய்தனர். அமெரிக்கா, தாய்லாந்து, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மன் நாடுகளைச் சேர்ந்த 20 சுற்றுலா பயணிகள் மாட்டு வண்டிகளில் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் பொங்கல் விழா, நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள், செட்டிநாடு கலைநயத்தில் கட்டப்பட்ட பாரம்பரிய வீடுகளை கண்டு களித்தனர். நகரத்தார்கள் கூறியதாவது: மற்ற நிகழ்ச்சிக்கு வராவிட்டாலும், பொங்கல் விழாவில் தவறாமல் பங்கேற்போம். இவ்விழாவை பாரம்பரியமாக நடத்தி வருகிறோம்,’ என்றனர்.
வரன் தேடிய வாலிபர்கள்: நாட்டரசன்கோட்டை பகுதி நகரத்தார்கள் தொழில், கல்வி போன்ற காரணங்களுக்காக வெளியூர் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வசிக்கின்றனர். அவர்கள் தங்கள் சொந்தங்களில் திருமணம் செய்வதையே விரும்புகின்றனர். இதற்காக நேற்று நடந்த பொங்கல் விழாவில் வரன் தேடும் படலமும் நடத்தினர். தங்கள் இணையை தாங்களே தேடி கொண்டனர்.