திருமூர்த்திமலை கோவிலில் தை அமாவாசை விழா கோலாகலம்!
உடுமலை : திருமூர்த்திமலை கோவிலில் நடந்த தை அமாவாசை சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அலங்காரத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வருகிறது. இங்கு மும்மூர்த்திகள் சங்கமித்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கோவை, திருப்பூர் மாவட்டம் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வருகை தருவர். கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாட்களில் மக்கள் அதிக அளவில் வருவர். தை அமாவாசையான இன்று (ஜன.27ல்) காலை முதல் சிறப்பு பூஜை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பாலற்றாங்கரையில், முன்னோர்களுக்கு திதி கொடுத்தும் பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். உடுமலையிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.