கந்தசாமி கோவில் திருவிழா: தேர் மிட்டாய் விற்பனை அமோகம்
மல்லசமுத்திரம்: காளிப்பட்டி கந்தசாமி கோவில் திருவிழாவில், தேர்மிட்டாய் விற்பனை அமோகமாக நடக்கிறது. மல்லசமுத்திரம் அடுத்த, காளிப்பட்டி கந்தசாமி முருகன் கோவிலில், தைப்பூச தேர்த் திருவிழா நடந்து வருகிறது. விழாவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது, தேர்மிட்டாய். இது, சேர் மிட்டாய் எனவும் அழைக்கபடுகிறது. இந்த மிட்டாய், தமிழ்நாட்டில் வேறு எந்த கோவிலிலும் கிடைப்பது அரிது. இதை வாங்குவதற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதுகுறித்து, மிட்டாய் வியாபாரி மாணிக்கம் கூறியதாவது: காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், தைப்பூச தேர்த் திருவிழாவின்போது, 15 நாட்களுக்கு மிட்டாய் வியாபாரம் செய்வோம். மிட்டாயில், சர்க்கரை, தேங்காய் ஆகிய பொருட்களை கலக்கிறோம். ஒரு கிலோ, 200 ரூபாய்க்கு விற்கிறோம். சுவை மிகுந்துள்ளதால், பக்தர்கள் அனைவரும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். விற்பனையும் அமோகமாக நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.