கோதண்டராமர் கோவிலில் மழை வேண்டி வருண ஜெபம்
கோவை : ராம்நகர், கோதண்டராமசாமி கோவிலில் மழை வேண்டி, வருண ஜெபம் மற்றும் ஸ்ரீ ராம நாம ஜெபம் நேற்று விமர்சையாக நடந்தது. பருவ மழை பொய்க்கும் சமயங்களில் மழை வேண்டி வருண பகவானுக்கு செய்யும் ஜெப பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது. இதன் அடிப்படையில், தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியிலிருந்து, உலகம் செழிக்கவும், தண்ணீர் பற்றாக்குறை தீரவும், எவ்வித குறையுமின்றி குடிநீர் கிடைக்கவும், வேளாண் தொழில் பெருகவும், கோதண்டராமசாமி கோவிலில் சிறப்பு, வருண ஜெபம் நேற்று நடந்தது. புரோகிதர்கள் ஜெகன்நாதன் மற்றும் சுந்தரவாத்தியார் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். புரோகிதர் சுந்தரவாத்தியார் கூறுகையில், காலை, 7:00 மணிக்கு துவங்கிய ஜெபத்தில், சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். ஜெபத்திலே உன்னதம் வாய்ந்தது, ஸ்ரீ ராம நாம ஜெபம். மக்கள் ஒருங்கிணைந்து ராம நாமத்தை சொல்லும்போது, அவ்விடமே சுபிக்ஷம் பெறும் என்பது ஐதீகம். எனவே இம்முறை, வருண ஜெபத்துடன் ராம நாம ஜெபமும் சேர்ந்து நடத்தப்பட்டது. தொடர்ந்து, பக்தர்கள் அனைவருக்கும், ஸ்ரீ ராம நாமத்தை எழுத புத்தகம் ஒன்று வழங்கப்பட்டது. மாலை, பேரூரிலிருந்து வரவழைக்கப்பட்ட பஜனை குழுவினரின், நாமசங்கீர்த்தனம் இசை நிகழ்ச்சியுடன் விழா முடிவடைந்தது, என்றார்.