சோளீஸ்வரர் கோவிலில் மினி திருமண மண்டப பணி
ஆற்காடுகுப்பம்: சோளீஸ்வரர் கோவில் வளாகத்தில், பக்தர்கள் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமவாசிகள் வசதிக்காக, 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், திருமண மண்டபம் கட்டும் பணிகள், துரித வேகத்தில் நடந்து வருகின்றன. திருத்தணி முருகன் கோவிலி,ன் துணை கோவிலான, சோளீஸ்வரர் கோவில், ஆற்காடுகுப்பம் கிராமத்தில் உள்ளது. இக்கோவிலுக்கு, திருத்தணி, ஆற்காடுகுப்பம், லட்சுமாபுரம், நெடும்பரம், ராமலிங்கபுரம், இலுப்பூர், இல்லத்துார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். இதுதவிர, தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு, சிவராத்திரி, பவுர்ணமி போன்ற முக்கிய விழா நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுவர். இந்நிலையில், கோவில் நிர்வாகம், பக்தர்கள் வசதிக்காகவும், கிராமவாசிகள் நலன் கருதி கோவில் வளாகத்தில், மினி திருமண மண்டபம் கட்டுவதற்கு தீர்மானித்து, பொது நிதியிலிருந்து, 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, ஒரு மாதமாக பணிகள் துவங்கப்பட்டுள்ளன. தற்போது, பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன. ஆறு மாத காலத்தில் இப்பணி முடித்து, கிராமவாசிகள் மற்றும் பக்தர்கள் வசதிக்காக, குறைந்த விலையில் வாடகைக்கு விடப்படும் என, கோவில் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.