உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் கொடிமரம் அகற்றம் - புதிய கொடி மரப்பணி தொடக்கம்

சபரிமலையில் கொடிமரம் அகற்றம் - புதிய கொடி மரப்பணி தொடக்கம்

சபரிமலை: சபரிமலையில் தற்போதிருந்த கொடிமரம் நேற்று அகற்றப்பட்டது. புதிய கொடிமர பணிகளும் தொடங்கியது. ஜூன் 24ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. சபரிமலையில் தற்போதுள்ள கொடிமரம் பழுதானதை தொடர்ந்து தேவபிரஸன்ன விதிப்படி புதிய தங்க கொடிமரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கான தேக்குமரம் ரான்னி காட்டில் இருந்து வெட்டப்பட்டு பம்பையில் மூலிகை எண்ணெயில் பதப்படுத்தப்பட்டு வருகிறது. மாசி மாத பூஜைகளில் கடைசி நாளான நேற்று காலை 10.30 மணிக்கு தற்போதைய கொடிமரம் அகற்றும் பணி தொடங்கியது. தந்திரி கண்டரரு கொடிமரத்திற்கு பூஜைகள் நடத்தினார். பின்னர் கொடிமரத்தின் மேற்பகுதியில் உள்ள தேவலோக குதிரையின் தெய்வீக சக்தியை ஆவாகித்து கலசத்தில் அடைத்து அதை ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் நடத்தினார். பின்னர் குதிரை சிலை கீழே இறக்கப்பட்டது. தொடர்ந்து கொடி கட்டப்படும் தண்டு இறக்கப்பட்டது. பின்னர் தேக்கு தடியை சுற்றி வைக்கப்பட்டிருந்த தகடுகள் இறக்கப்பட்டது. தொடர்ந்து பீடம் அப்புறப்படுத்தப்படுத்திய பின்னர் தேக்கு மரம் கீழே எடுத்து வைக்கப்பட்டது. கொடிகட்டப்படும் தண்டு கோயிலின் தெற்கு பகுதியில் கொண்டு செல்லப்பட்டு அங்கு தந்திரி எரித்தார். தொடர்ந்து புதிய கொடிமரம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது. புதிய தங்க கொடிமர கும்பாபிஷேகம் ஜூன் 24-ம் தேதி நடக்கிறது.இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா மார்ச்31 முதல் ஏப்., 9 வரை நடக்கிறது. ஆனால் கொடியேற்று மற்றும் ஆராட்டு நடைபெறாது. விழா நாட்களில் உற்சவபலி உள்ளிட்ட சடங்குகளும், பூஜைகளும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !