உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையானுக்கு ரூ.5 கோடி நகை : பிரார்த்தனையை நிறைவேற்றிய முதல்வர்

திருமலையானுக்கு ரூ.5 கோடி நகை : பிரார்த்தனையை நிறைவேற்றிய முதல்வர்

திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் உள்ள, திருப்பதி - திருமலை வெங்க டேஸ்வரா கோவிலுக்கு, தெலுங்கானா முதல்வர், சந்திரசேகர ராவ், ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை காணிக்கையாக அளித்தார். தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர், சந்திரசேகர ராவ், தெலுங்கானாவின் முதல்வராக உள்ளார். ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்பட்ட பின், ஆந்திராவில் உள்ள திருப்பதி - திருமலை கோவிலுக்கு, நேற்று முதல் முறையாக அவர் வந்தார்.அப்போது, திருமலை வெங்கடேஸ்வரா கோவிலுக்கு, ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை, மாநில அரசு சார்பில், அவர் காணிக்கையாக செலுத்தினார். மொத்தம், 19 கிலோ எடையுள்ள, தங்கத்தால் செய்யப்பட்ட சாளிக்கிராம மாலை மற்றும், மகர காந்தாபரணம் எனப்படும் தங்க நெக்லஸ் ஆகியவற்றை அவர், கோவில் செயல் அலுவலர் சாம்பசிவராவிடம் ஒப்படைத்தார். நாடு சுதந்திரம் அடைந்த பின், ஒரு மாநில அரசு அளித்துள்ள மிகப் பெரிய காணிக்கை இது.கோவிலில் தரிசனம் செய்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்களுக்கு, கோவிலின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.நேற்று முன்தினம் இரவே திருப்பதி வந்த அவர், நேற்று காலை, திருச்சானுார் பத்மாவதி கோவிலிலும் தரிசனம் செய்தார். பிரார்த்தனையை நிறைவேற்றவே கோவிலுக்கு வந்துள்ளேன், என, சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.

தொடரும் காணிக்கைகள் : தெலுங்கானா புதிய மாநிலம், 2014ல் உருவான பின், அதன் முதல் முதல்வராக சந்திரசேகர ராவ் பதவியேற்றார். அதன்பின், 2016 அக்டோபரில், வாரங்கலில் உள்ள பத்ரகாளி கோவிலுக்கு, 3.65 கோடி ரூபாய் மதிப்புள்ள, 11 கிலோ, 700 கிராம் எடையுள்ள தங்க கிரீடத்தை காணிக்கையாக செலுத்தினார். திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலுக்கு, தங்க கிரீடம், நெக்லஸ் ஆகியவற்றையும், விஜயவாடா கனகதுர்கா அம்மனுக்கு, தங்க மூக்குத்தியும் காணிக்கையாக அவர் செலுத்தினார்.

வேலை எங்கே? : தெலுங்கானாவில் உள்ள வேலைவாய்ப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தெலுங்கானா ஒருங்கிணைந்த நடவடிக்கை குழு சார்பில், தலைநகர் ஐதராபாத்தில் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்துக்கு, ஏற்கனவே மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், குழுவின் தலைவர் எம்.கோதண்ட ராம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் ஏராளமான இளைஞர்கள் வேலையின்றி தவிக்கும் சூழ்நிலையில், முதல்வர் சந்திரசேகர ராவ், கோவில்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள காணிக்கைகளைசெலுத்துவது, போராட்ட குழுவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !