மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி விழா: நாளை துவக்கம்
தேவதானப்பட்டி, தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா நாளை துவங்குகிறது. தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தலங்களில் தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் ஒன்றாகும். இங்கு பூட்டிய கதவிற்கு மட்டும் பூஜை செய்யப்படுகிறது. அதற்கு முன்பாக தேங்காய் உடைக்கப்படுவது இல்லை. பக்தர்கள் வழங்குகின்ற நெய் மூலம் 24 மணி நேரமும் அணையா விளக்கு எரிகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரி அன்று திருவிழா துவங்கி ஒருவாரம் நடக்கும். தேனி மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசிப்பர். இந்தாண்டு சிவராத்திரி விழா நாளை துவங்குகிறது. பக்தர்களுக்காக பெரியகுளம், தேவதானப்பட்டி, வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளில் இருந்து அரசு சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. தடையில்லா மின்சாரம் மற்றும் தேவதானப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணி செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேவதானப்பட்டி பேரூராட்சி சார்பில் துப்புரவுப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.