சிவராத்திரியன்று பாட வேண்டிய எளிய பாடல்கள்!
தினத்தில் லிங்க தரிசனம் செய்வதுடன், சிவலிங்கத் திருமேனியைப் போற்றும் லிங்கப் புராண குறுந்தொகை முதலான தெய்வப் பாடல்களைப் பாடி வழிபடுவது சிறப்பு. அந்த வகையில் சிவனாரைத் துதிக்கும் லிங்காஷ்டகம் பெரிதும் மகிமை வாய்ந்தது. ஆதிசங்கரர் அருளிய லிங்காஷ்டகத்தைப் படிப்பதால், ஜாதகத்தில் சூரியன் மற்றும் குருவால் ஏற்படும் குறைகள் நீங்கும்; பிணிகளும் அகன்று நலம் பெறலாம். சகல மங்கலங்களும் உண்டாகும். இதில் பிரம்மன், மகாவிஷ்ணு மற்றும் தேவர்களால் அர்ச்சிக்கப்படும் லிங்க மூர்த்தியை... நிர்மலமாகவும் பிரகாசத்துடன் கூடியதாகவும், சோபையுடன் கூடியதாகவும் உள்ள லிங்க மூர்த்தியை.. பிறப்பினால் ஏற்படும் துக்கதைப் போக்குகின்ற லிங்க மூர்த்தியை.. எப்போதும் மங்கலத்தை அருளும் மகாலிங்கத்தைப் போற்றுகிறேன்... எனத் துவங்கி எட்டு ஸ்லோகங்களால் பரமனைப் போற்றும் ஆதிசங்கரர், இந்த ஸ்லோகங்களைச் சொல்லி பரமேஸ்வரனை வழிபட சிவலோகத்தில் வசிக்கும் பேரானந்த பெருநிலையை அடைவான் என்றும் அறிவுறுத்துகிறார். இதோ... மகாலிங்கத்தைப் போற்றும் லிங்காஷ்டகம் எட்டு ஸ்லோகங்களில் ஒன்று தரப்பட்டுள்ளது.
கனகமஹாமணிபூஷித லிங்கம்
பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம்
தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
பொருள் : தங்கத்தாலும், சிறந்த மணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, நாகராஜனால் சுற்றப்பட்டு விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, தக்ஷ யாகத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, மங்கலத்தைச் செய்யும் மகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன். இவ்வாறு விரதம் இருந்து வழிபட இயலாதவர்கள் சிவபெருமானின் எட்டு நாமங்களையாவது ஓயாமல் ஜபிக்க வேண்டும் அவை:
ஓம் ஸ்ரீபவாய நம
ஓம் ஸ்ரீசர்வாய நம
ஓம் ஸ்ரீருத்ராய நம
ஓம் ஸ்ரீபசுபதயே நம
ஓம் ஸ்ரீஉக்ரயே நம
ஓம் ஸ்ரீமகா தேவாய நம
ஓம் ஸ்ரீபீமாய நம
ஓம் ஸ்ரீஈசாநாய நம
சிவராத்திரியன்று இரவில் விழித்திருக்கும் போது, பாட வேண்டிய எளிய பாடல்கள்!
சிவசிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்றிடச் சிவகதி தானே.
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தன் இணையடி நீழலே!
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால்
வெண்ணெய் நல்லூர் அருள்துறையுள்
அத்தா! உனக்காளாய் இனி அல்லேன் எனல் ஆமே!
உலககெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
கல்லாப் பிழையும் கருதாப்பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப்பிழையும் ஐந்தெழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாய்ப்பிழையும்
எல்லாப் பிழையும் பொருத்தருள் கச்சிஏகம்பனே!
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கிசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்க்கொன்றை அணிந்தவனே!
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே!