சேலம் கோவில்களில் சிவராத்திரி விழா கோலாகலம்
சேலம்: சேலம் மாவட்டத்தில், மஹா சிவராத்திரி முன்னிட்டு, சிவன் கோவில்களில், சிறப்பு பூஜை, பிப்24, நடந்தது. சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில், இரவு, 8:00 மணிக்கு, முதல் கால யாக பூஜை துவங்கியது. தொடர்ந்து, 11:00, 2:00, அதிகாலை, 5:00 மணிக்கு, சிறப்பு பூஜை நடந்தது. ஒவ்வொரு பூஜையின்போதும், சுவாமிக்கு, பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம், விபூதி உள்பட பல்வேறு வாசனை பொருட்களால் அபிஷேகம் நடந்தது. சுகவனேஸ்வரர், தங்க நாகாபரண அலங்காரத்தில், பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு முழுவதும் நடந்த பூஜையில், ஏராளமானோர், சுவாமியை வழிபட்டனர். ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், தங்கள் கைகளாலே, பக்தர்கள் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தனர். மேலும், லிங்கத்திற்கு வில்வம் இலையுடன், பால் அபிஷேகம் செய்தனர். அதேபோல், ஆத்தூர், கைலாசநாதர், நரசிங்கபுரம் சொர்ணபுரீஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், வீரகனூர் கங்கா சவுந்தரேஸ்வரர் ஆகிய கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது. மேலும், ஓமலூர் சந்தை அருகே காசிவிஸ்வநாதர், கோட்டை வசந்தீஸ்வரர், முள்ளிசெட்டிப்பட்டி, மல்லிஹார்ஜூன சிவன், தேவியாக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவில்களில் எட்டு கால பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள், நந்தி சிலைக்கு விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.