உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புட்லூர் அம்மன் கோவிலில் மயான கொள்ளை

புட்லூர் அம்மன் கோவிலில் மயான கொள்ளை

புட்லுார்: புட்லுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று, மயான கொள்ளை நடந்தது. திருவள்ளூர் அடுத்த, புட்லுார் ராமாபுரத்தில் பூங்காவனத்தம்மன் (எ) அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஆண்டுதோறும் மயான கொள்ளை நடந்து வருகிறது. இந்த ஆண்டு, மயான கொள்ளை உற்சவம் நேற்று மதியம் நடந்தது. முன்னதாக, இரு தினங்களுக்கு முன், மயான கொள்ளையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் காப்பு கட்டிக் கொண்டனர். இதையடுத்து, நேற்று முன்தினம் காலை, மஹா சிவராத்திரியை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. அதன் பின், மாலை, அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் திருவீதியுலா நடந்தது. இதில், சுற்றுப்புற கிராமத்திலிருந்து திரளான பகுதிவாசிகள் கலந்து கொண்டனர். மயான கொள்ளையை முன்னிட்டு, நேற்று மதியம், கோவில் குளம் அருகே மைதானத்தில், அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். பின், விரதமிருந்த பக்தர்கள் தங்களது வேண்டுதலை, அப்பகுதியில் மயானத்தில் நிறைவேற்றினர். அதன் பின், அம்மன் வீதிஉலா நடந்தது. நேற்று நடந்த மயான கொள்ளை உற்சவத்தில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !