கிரிவலப்பாதை சாய்பாபா கோவிலில் உலக அன்னதான நாள் உறுதி மொழி ஏற்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில் உள்ள, அக்சய ஸ்ரீசாயி தியான சபையில் உலக அன்னதான நாளை முன்னிட்டு, உறுதி மொழி எடுக்கப்பட்டது. திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில் உள்ள அக்சய ஸ்ரீசாயி தியான சபையில், அதன் நிறுவனர், சாய் ரவிசந்திரன் தலைமையில், உலக அன்னதான நாளை முன்னிட்டு உறுதி மொழி ஏற்கப்பட்டது. 300க்கும் மேற்பட்ட பள்ளி, மாணவ, மாணவியர் பங்கேற்று, உணவை வீணாக்காமல், மற்றவரோடு பகிர்ந்து உண்போம், மற்றவர்களுக்காக பாதுகாப்போம் எனக்கூறி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். மேலும், பள்ளி, மாணவ, மாணவியர் கையில் பதாகைகளை ஏந்தியவாறு, துண்டு பிரசுரங்களை கிரிவலம் சென்ற பக்தர்களிடம் கொடுத்து, அன்னதானம் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர். அக்சய ஸ்ரீசாயி தியான சபை நிறுவனர் சாய் ரவிசந்திரன் பேசியதாவது: உணவு பொருட்கள், சரிவர பாதுகாக்கப்படாததால், உலகெங்கும் வீணாக்கப்படுகிறது. இந்நிலையை மாற்றி, உணவை வீணாக்காது, மற்றவர்களுக்காக வழங்கவும் ஒழுக்கத்தையும் வலியுறுத்தி, உலக அன்னதான நாள் உறுதி மொழி ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.