வாழைத்தண்டு பழக்கூட்டுடன் பழநி சஷ்டி விரதம் நிறைவு!
பழநி:பழநியில், கந்த சஷ்டி விரதம் இருந்த பக்தர்கள், வாழைத்தண்டு பழக்கூட்டு நைவேத்யத்துடன், நோன்பை முடித்தனர். கந்த சஷ்டி விழாக் காலத்தில், ஒரு வாரம் வரை பக்தர்கள் விரதம் இருப்பர். விரதத்தை வாழைத்தண்டு நைவேத்யத்துடன் முடிக்கும் வழக்கம், பழநியில் உள்ளது.சஷ்டி விரதம் இருந்த பக்தர்கள் நேற்று, பழநி மலைக்கோவில், திருஆவினன்குடியில் குவிந்திருந்தனர். குழுவாக அமர்ந்து, வாழைத்தண்டு நைவேத்ய தயாரிப்பில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தொப்பம்பட்டி கந்தப்பகவுண்டன் வலசைச் சேர்ந்த பழனிச்சாமி கூறுகையில், ""நான்கு தலைமுறையாக, தொடர்ந்து இவ்விரதம் இருக்கிறோம். தீபாவளியில் துவங்கி, ஏழு நாட்கள் விரதம் இருந்து, சூரசம்ஹாரம் அன்று, பழநியில் விரதம் முடிப்போம்.வாழைத்தண்டு பழக்கூட்டை மலைபோல் குவித்து, மலர் அலங்காரத்துடன் வழிபடுவோம். கருவறையில் சுவாமிக்கு நைவேத்யம் முடித்து, தயிர் கலந்து பிரசாதமாக வழங்கப்படும் படையலில், வாழைத்தண்டுக்கு முக்கியத்துவம் இருக்கும். அவரவர் தகுதிக்கேற்ப ஆப்பிள், மாதுளை, திராட்சை, கேரட் என சேர்ப்பர் என்றார்.