உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை பக்தர் வசதிக்காக சிறப்பு பஸ்கள்: முன்பதிவு துவக்கம்!

சபரிமலை பக்தர் வசதிக்காக சிறப்பு பஸ்கள்: முன்பதிவு துவக்கம்!

சபரிமலை சீசனை ஒட்டி, அங்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மூலம் 11ம்தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. கார்த்திகை மாதம் சிறப்பு பூஜைகளுக்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படும். இதையொட்டி தமிழகத்தில் ஏராளமான பக்தர்கள் மாலையணிந்து, விரதம் இருந்து அங்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். வரும் 17ம்தேதி கார்த்திகை மாதம் முதல் தேதி துவங்க உள்ள நிலையில், சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்களை இயக்க, அரசு விரைவு போக்குவரத்து கழகம் (எஸ்.இ.டி.சி.,) திட்டமிட்டுள்ளது. சென்னையில் இருந்து வரும் 11ம்தேதி முதல் நாள்தோறும் 15 சிறப்பு பஸ்கள் தேனி, கம்பம், குமுளி, வண்டிபெரியார், எரிமேலி வழியாக பம்பை வரை இயக்கப்படவுள்ளன. இந்த பஸ்கள் பிற்பகல் 2மணி முதல் மாலை 6மணிவரை சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பம்பைக்கு புறப்பட்டு செல்லும். இதேபோல மதுரை, திருச்சி, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் தலா ஐந்து அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள், பம்பைக்கு சிறப்பு பஸ்களாக இயக்கப்படவுள்ளன. பயணிகள் தேவைக்கு ஏற்ப, ஜனவரி மாதம் நடக்கும் மகரஜோதி தரிசனத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பஸ்களின் இயக்கம் ஜனவரி 20ம்தேதி வரை நீடிக்கும். சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவுகள் நேற்று துவங்கியது. அரசு பஸ்கள் மூலம் சபரிமலை செல்வதற்கு பக்தர்கள் ஆர்வம் காட்டுவதால், சென்னையில் முன்பதிவு விறுவிறுப்படைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !