200 ஆண்டுகளை கொண்டாட இருக்கும் சிதையாத வலது கரம்!
சென்னை:கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தில், புனிதரான தொன்போஸ்கோவின் 200வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், அவரது வலது கை வைக்கப்பட்டுள்ள மெழுகு சிலை, உலகமெங்கும் மக்களின் தரிசனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் தொன்போஸ்கோ. கிறிஸ்துவ மறை பரப்பில், சலேசிய சபையை நிறுவி, நற்பணிகளை செய்து வந்தார்.கடந்த 1888ம் ஆண்டு, 72வது வயதில் தொன்போஸ்கோ இறந்தார். புனிதரான தொன்போஸ்கோவின் கல்லறை தோண்டப்பட்ட போது, வலது கை மட்டும் சிதையாமல் இருந்தது. சலேசிய சபையினர், அவரது வலது கையை தனியாக எடுத்து, பாதுகாத்து வந்தனர். பின், 2009ம் ஆண்டு இந்த வலது கை, தொன்போஸ்கோ மெழுகு சிலையின் மார்பு பகுதிக்குள் வைக்கப்பட்டு, இத்தாலியில் பாதுகாக்கப்பட்டு வந்தது.தொன்போஸ்கோவின், 200வது பிறந்த நாள் மற்றும் சலேசிய சபை நிறுவி, 150 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, 1815-2015 என எழுதப்பட்ட கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டு, பொதுமக்களின் தரிசனத்திற்காக, உலகில் உள்ள, 132 நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு துவங்கிய இப்பயணம், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைக் கடந்து, தற்போது இந்தியாவை வந்தடைந்துள்ளது. தமிழகத்தில், நெல்லை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல இடங்களில், அவரது திருக்கரம் எடுத்துச் செல்லப்பட்டது.கடந்த 28ம் தேதி சென்னை கொண்டு வரப்பட்டது. சென்னையில் உள்ள பிரபல தொன்போஸ்கோ பள்ளிகளுக்கும், சமூக சேவை அமைப்புகளுக்கும் மற்றும் திருத்தலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களுக்கும், இக்கண்ணாடிப் பேழை எடுத்துச் செல்லப்பட இருக்கிறது. நவ., 18ம் தேதி, வரை, சென்னையில் உள்ள பல இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு, பின் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதாக, சலேசிய சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சாந்தோம் மற்றும் எழும்பூரில், தொன்போஸ்கோவின் திருக்கரம் :சென்னை எழும்பூரில் உள்ள தொன்போஸ்கோ மேனிலைப் பள்ளியில், புனித தொன்போஸ்கோவின் வலது கரம் அடங்கிய பேழை கொண்டு வரப்பட்டது. மக்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்ட இந்த பேழை, பின், சிறப்பு ஜெப வழிபாடுகளுடன், சாந்தோம் பேராலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.அங்கு, வழிபாடுகள் நடத்தப்பட்டன. நவ. 18 ம் தேதி வரை, சென்னையில் பவனி ஏற்பாடுகளை, அந்தந்த இடங்களில் உள்ள தொன்போஸ்கோ இளைஞர் இயக்கங்கள் செய்கின்றன.