உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூரில் விண்ணைப்பிளந்தது அரோகரா கோஷம்!

திருச்செந்தூரில் விண்ணைப்பிளந்தது அரோகரா கோஷம்!

தூத்துக்குடி: ""வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பலலட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நேற்று மாலை ஆணவம் கொண்டு போரிட்ட சூரனை, சுவாமி ஜெயந்திநாதர் சம்ஹாரம் செய்தார்.இக்கோயில் கந்தசஷ்டி திருவிழா அக்.,26ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. தினமும் காலை,மாலை யாகசாலை பூஜை, தீபாராதனை, சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளல் நடந்தது. ஆறாம் நாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்குப்பின், காலை 6.30 மணியளவில் கடைசிகால யாகசாலை பூஜை நடந்தது. அங்கு தீபாராதனைக்குப்பின் சுவாமி ஜெயந்திநாதர், தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து மதியம் 1.30 மணியளவில் கந்தசஷ்டி விரத மண்பத்தில் எழுந்தருளினார். மாலை 3.10 மணியளவில் சூரன், கடற்கரைக்கு வந்தான். தீபாராதனையைத் தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், 4.35 மணியளவில் சூரசம்ஹாரத்திற்காக கடற்கரையில் எழுந்தருளினார். அங்கு கஜமுகன், சிங்கமுகன், சூரபத்மனாய் அடுத்தடுத்து வலம் வந்து ஆணவத்துடன் போரிட்ட சூரனை, சுவாமி ஜெயந்திநாதர் தன்னுடையே வேலால் மாலை 5.51 மணிக்கு சம்ஹாரம் செய்தார். அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள், "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷமெழுப்பினர். பின்னர், சேவல் உருவத்தில் போரிட்ட சூரனை, சுவாமி தன்னுடைய சேவற்கொடியாகவும், மாமரமாகவும் ஆட்கொண்டார். சம்ஹாரம் முடிந்ததும், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுக்கு, சந்தோஷ மண்டபத்தில் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஆறு நாள் சஷ்டி விரதமிருந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி, விரதத்தை முடித்தனர். இரவில் சுவாமி- அம்பாள்களுக்கு சாயா அபிஷேகம் எனப்படும் நிழல் அபிஷேகம் நடந்தது. இன்று திருக்கல்யாணம் நடக்கிறது.திருச்செந்தூரில் நேற்று பகல் 11 மணி வரை பலத்த மழை பெய்தது. அதன்பின் மழையில்லாததால், சூரசம்ஹாரத்தை காணவந்த பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !