பங்குனி மாத பூஜை: சபரிமலையில் நடை திறப்பு
சபரிமலை: சபரிமலையில் நடைபெற்று வரும் பங்குனி மாத பூஜையில் திரளான ஐயப்ப பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நேற்று முன்தினம் மாலை ஐந்து மணிக்கு திறக்கப்பட்டது. அன்று வேறு எந்த விசேஷ பூஜைகளும் நடைபெறவில்லை. நேற்று அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு, ஐயப்பன் விக்ரகத்தில் நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடந்தது.இன்று முதல் 19-ம் தேதி வரை தினமும் சகஸ்ர கலசபூஜை, இரவு ஏழு மணிக்கு படிபூஜை நடக்கிறது.பங்குனி மாதத்தில் ஐயப்பனை வணங்க நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வரும் 19-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின்னர் பங்குனி உத்திர திருவிழா பூஜைகளுக்காக வரும் 30-ம் தேதி மாலை மீண்டும் நடை திறக்கும். தற்போது புதிய கொடிமரம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் கொடியேற்று மற்றும் ஆறாட்டு நடைபெறாது.