கோவில் கோபுரங்களில் செடிகள் அகற்ற அரசுக்கு கோரிக்கை
வேலுார்: நாடு முழுவதும், கோவில் கோபுரங்களில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும், என, ஸ்ரீசைலம் மகா நந்தி பீடாதிபதி வரதராஜ சுவாமிகள் கூறினார். இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இதில், ஒரு லட்சம் கோவில்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இரண்டு லட்சம் கோவில் கோபுரங்களில் செடிகள் வளர்ந்துள்ளன. இதை அகற்றாவிட்டால், கோவில் கோபுரங்களில் விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழுந்து விடும். கோபுரங்களில் உள்ள செடிகளை அகற்ற, ஒரு கோவிலுக்கு, 50 ஆயிரத்தில் இருந்து, 2 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இந்த பணம் கோவில் நிர்வாகத்திடம் இல்லை. எனவே மத்திய, மாநில அரசுகள், கோவில் கோபுரங்களில் உள்ள செடிகளை அகற்ற, சிறப்பு நிதி வழங்க வேண்டும். இல்லாவிட்டால், பக்தர்கள் ஒன்று சேர்ந்து கோபுரங்களில் உள்ள செடிகளை அகற்றலாம். ஆந்திரா மாநிலத்தில் உள்ள, 20 ஆயிரம் கோவில் கோபுரங்களில் வளர்ந்துள்ள செடிகளை, ஏப்., 10 முதல், 20 வரை பக்தர்களே அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.