கும்பகோணம் சாரங்கபாணி கோயிலுக்கு ரூ.25 லட்சத்தில் புதிய தங்க சடாரி!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் அருள்பாலித்துவரும் கோமளவல்லி தாயாருக்கு 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தில் வடிவமைக்கப்பட்ட சடாரியை பக்தர் ஒருவர் உபயமாக வழங்கினார்.
சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலான தொன்மையும், பழமையும் வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க கோயிலாகத்திகழ்வது கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலாகும். பெரியாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள் ஆகிய ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்றதும், 108 வைணவத் திருத்தலங்களில் இத்திருக்கோயில் மட்டுமே. சிறப்பு பெற்ற இக்கோயிலில் கோமளவல்லி தாயார் சமேதராக சாரங்கபாணி சுவாமி அருள்பாலித்து வருகிறார். மூலவர் சாரங்கபாணி சுவாமிக்கு ஏற்கனவே தங்கத்தால் செய்யப்பட்ட சடாரி உள்ளது. ஆனால் தாயாருக்கு தங்கத்தில் இல்லாததால் பெங்களூர் தொழிலதிபரும், திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலருமான சம்பத் ரவிநாராயணன் என்ற பக்தர் 614 கிராம் தங்கத்தில், அரை அடி உயரத்திற்கு சடாரியை வடிவமைத்தும், அதை வைத்து பயன்படுத்துவதற்காக 203 கிராம் வெள்ளியால் செய்யப்பட்ட வெள்ளிதட்டும் செய்து நேற்று கோயிலுக்கு உபயமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதை முன்னிட்டு முன்னதாக பிரதிஷ்டா ஹோமமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதையடுத்து உபயதாரர் சம்பத் ரவிநாராயணன் தங்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள சடாரியை கோயில் நிர்வாக அதிகாரி ஆசைத்தம்பியிடமும், கோயிலின் சக்கரபாணி பட்டாச்சாரியாரிடம் உபயமாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில் குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பின் செயலாளர் சத்தியநாராயணன் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். உபயதாரர் சம்பத் ரவிநாராயணன் ஏற்கனவே இக்கோயிலுக்கு சுமார் 40லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தெப்பத்தை உபயமாக வழங்கியிருக்கிறார். அதே போல் தற்போது தயாராகிவரும் தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்திற்கு உபயதாரராக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.