உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இலஞ்சி குமாரர் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

இலஞ்சி குமாரர் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

குற்றாலம்:திருஇலஞ்சி குமாரர் கோயிலில் நேற்று கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கும், அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது.இலஞ்சி குமாரர் கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 26ம்தேதி துவங்கியது. இதனை முன்னிட்டு குமாரருக்கும், தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், விசேஷ தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவின் 7ம் திருநாளான நேற்று சுவாமிக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.முன்னதாக நேற்று காலை 11மணிக்கு மேல் சப்பரத்தில் எழுந்தருளி அம்பாள் கோயில் வளாகத்தை சுற்றி திருவீதி உலா வந்து கோயிலுக்கு வந்து சேர்ந்தார். அங்கு சுவாமியை காண வேண்டி தபசு இருந்த அம்பாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் மூலவருக்கு முழுக்காப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாலை 7மணிக்கு மேல் குமாரர் சப்பரத்தில் (பல்லக்கு) எழுந்தருளி தபசு இருந்த அம்பாளுக்கு காட்சி கொடுத்தார். பின்னர் சுவாமி, அம்பாள் இருவரும் சேர்ந்து வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். இரவு 8மணிக்கு மேல் குமாரக் கடவுளுக்கும், அம்பாளுக்கும் சந்நிதி முன் உள்ள மண்டபத்தில் திருக்கல்யாணம் நடந்தது. சுவாமி, அம்பாள் மாலை மாற்றும் நிக்ழ்ச்சியை பக்தர்கள் பரவசத்துடன் கண்டுகளித்தனர். தொடர்ந்து சுவாமி, அம்பாள் பட்டிணபிரவேசம் நடந்தது. இன்று (2ம்தேதி) காலை 10மணிக்கு முழுக்காப்பு தீபாராதனையும், மாலை 7மணிக்கு மேல் 8மணிக்குள் ஊஞ்சல் நிகழ்ச்சியும், நாளை (3ம்தேதி) காலை 10.30 மணிக்கு மேல் தீர்த்தவாரியும் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் கணபதி முருகன், செயல் அலுவலர் தங்கப்பாண்டியன் செய்து வருகின்றனர்.

குற்றாலம் குற்றாலநாதர் கோயில்: திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீ முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தது. திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 26ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தினசரி அபிஷேகம், தீபாராதனையும், சுவாமி திருக்கோயில் வளாகத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும்நடந்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் முருகக் கடவுள் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது. 7வது நாளான நேற்று காலை கோயில் திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம், சாயரட்சையும், மாலை 2.30மணிக்கு மேல் 3மணிக்குள் சுவாமி மாலை மாற்று விழாவுக்கு புறப்பட்டு மாலை 5மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி அருளி தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சியும் இரவு முருக கடவுள் வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாண வைப நிகழ்ச்சியும் நடந்தது.சுற்றுவட்டார பகுதி வாழ் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி, அம்பாள் தரிசனம் பெற்று சென்றனர்.ஏற்பாடுகளை தக்கார் கவிதா பிரியதர்ஷிணி, செயல் அலுவலர் சுகுமாரன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !