பாழாகும் கோவில் கோபுரங்கள்: அறநிலையத்துறை கவனிக்குமா?
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் கோபுரங்களில் செடிகள் முளைத்து, சிற்பங்கள் சிதைவதை தடுக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில், 1,500 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழாக்களும்; பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை உள்ளிட்ட மாதாந்திர விசேஷங்களும் சிறப்பாக நடக்கும். தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநில, மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் தினசரி வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
இங்கு பூஜைக்கு பயன்படும் தளவாட பொருட்கள், வளாகம் துாய்மை செய்வது போன்ற உழவாரப் பணிகளை அவ்வப்போது சிவத்தொண்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இக்கோவில் ஐந்து கோபுரங்கள், ஐந்து கொடி மரங்கள் என ஐந்தின் சிறப்புகளை கொண்டது. ஆனால், கோவில் கோபுரங்கள் பராமரிப்பின்றி சிற்பங்கள் சிதிலமடைந்து வருகின்றன. கோபுரம் முழுவதும் செடிகள் முளைத்து, அதிலுள்ள சிற்பங்கள் பெயர்ந்து கீழே விழுந்து உடைந்து வீணாகிறது. பக்தர்கள் புகாரின் பேரில், கோவில் நிர்வாகம் சார்பில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் மேற்குப் பகுதி கோபுரத்தில் முளைத்திருந்த செடிகளை அழித்து, வர்ணம் அடிக்கப்பட்டது. ஆனால், கோபுரத்தில் மீண்டும் செடிகள் முளைத்து, கலையிழந்து காட்சியளிக்கிறது. எனவே, விருத்தகிரீஸ்வரர் கோவில் கோபுரங்களில் வளர்ந்துள்ள செடிகளை அழித்து, புதுப்பிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.