நாக வாகனத்தில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பவனி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவில், நேற்று, காலை சுவாமி நாக வாகனத்தில் எழுந்தருளி நான்கு ராஜவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவில் தினமும் சுவாமி ஒவ்வொரு வாகனத்தில் புறப்பாடாகி வருகிறார். நேற்று நான்காம் நாள் திருவிழாவில், சுவாமி நாக வாகனத்தில் எழுந்தருளினார். இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் நான்கு ராஜவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக, நேற்று முன்தினம் இரவு ஏகாம்பரநாதர், ஏலவார் குழலி, விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகர் சின்னகாஞ்சிபுரம் வரை சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். காந்தி சாலையில் ஜவுளிக்கடை சத்திரம் அருகில் வாண வேடிக்கையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின், மூன்றாம் திருவிழா மண்டபம் வரை சென்று மீண்டும் கோவிலை சென்றடைந்தார். வழக்கமாக நான்கு ராஜவீதிகள் வரை செல்லும் ஏகாம்பரநாதர் மூன்றாம் நாள் திருவிழாவில் சின்ன காஞ்சிபுரம் வரை குடும்பத்தாருடன் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்று காலை, வெள்ளி அதிகார நந்தி சேவை நடை பெறுகிறது. இரவு கைலாசபீட ராவண வாகனத்தில் சுவாமி எழுந்தருள்வார்.